திங்கள், 19 அக்டோபர், 2026

தூயசக்தி நிர்வாகியிடம் 137 கிலோ கிரிஸ்டல் மெத் எப்படி?

 source https://tamil.indianexpress.com/tamilnadu/central-govt-dri-report-on-methamphetamine-seize-from-nagapattinam-tvk-cadre-12687415


18 10 2026 

nagai drug

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தில் ரூ.650 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில், த.வெ.க மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், வழக்கறிஞருமான பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில், இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்திலிருந்து, தடைசெய்யப்பட்ட செயற்கை போதைப்பொருளான கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைனை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 137 கிலோ கிராம் ஆகும்.

உளவு தகவலின் அடிப்படையில்,  வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 2026 அக்டோபர் 16, 17 தேதிகளில் தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் மூலம், போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு கடலோர போதைப்பொருள் கடத்தல் கும்பலை அதிகாரிகள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தனர். இந்த போதைப் பொருள், கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்தது. கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள்களின் சந்தை மதிப்பு சுமார் ₹100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 5 கிலோ எடை கொண்ட 27 வெள்ளித் தகடு பொட்டலங்கள் அடங்கிய ஆறு டஃபிள் பைகள் மீட்கப்பட்டன. அந்தப் பொட்டலங்களில், மெத்தம்பெட்டமைன் என சந்தேகிக்கப்படும் ஒரு வெள்ளை நிறப் படிகப் பொருள் இருந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேகத்திற்குரிய நபரின் இடத்தில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என சந்தேகிக்கப்படும் ₹10 லட்சம் ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும், ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நான்கு நபர்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 source https://tamil.indianexpress.com/tamilnadu/central-govt-dri-report-on-methamphetamine-seize-from-nagapattinam-tvk-cadre-12687415