சனி, 17 அக்டோபர், 2026

திருவண்ணாமலை கோயிலில் திடீர் பரபரப்பு

 Thiruvannamalai TN Minister Aadhav Arjuna assistant muslim cap Temple Issue Karthigai Deepam Tamil News

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தீபத் திருவிழா தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தொப்பி (குல்லா) அணிந்த நபர் ஒருவர் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், காவல்துறை உயர் அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

வழக்கமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் வரை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பது மற்றும் செய்தி சேகரிப்பது வழக்கம். ஆனால், இன்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பிரதான கோபுரமான ராஜகோபுரத்திற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கடந்த ஆட்சியில் கூட பத்திரிக்கையாளர்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது இதுபோன்ற செய்வது சரியா?' என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தொப்பி அணிந்த நபர் ஒருவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் கோவிலுக்குள் சென்றார். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தொப்பி அணிந்த நபர் ஒருவர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களுக்கு ஒரு விதி; மற்றவர்களுக்கு ஒரு விதியா? எனக் கூறி அங்கிருந்த சிலர் அமைச்சர் ரமேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால், தொப்பி அணியவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தொப்பியைக் கழற்றிவிட்டு ஆய்வில் பங்கேற்றார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டனம் 

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு பாரதிய ஜனதா கட்சி தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "திருவண்ணாமலை கோவிலில் தங்கள் மத  அடையாளமான தொப்பி அணிந்த இஸ்லாமியரை  அழைத்து சென்ற ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் (30 ஜனவரி 2024)படி கொடிமரம்/ துவஜஸ்தம்பம் தாண்டி  ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு நுழைய அனுமதி இல்லை. ஒரு வேளை, ஹிந்து அல்லாத ஒருவர் வழிபட  விரும்பினால், தனக்கு அந்த கடவுளின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், ஹிந்து கலாச்சாரம் மற்றும் கோவிலின் விதிகளை பின்பற்றுவதாகவும் எழுத்து பூர்வமாக தெரிவிப்பதோடு அந்த கோவிலின் பதிவேட்டில் பதிய வேண்டும்.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? அந்த இஸ்லாமியர் சட்டப்படி ஹிந்து கடவுளை ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதிமொழியை எழுதி கொடுத்தாரா? இதே போன்று மற்ற வழிபாட்டு தளங்களில் நடைபெற்றால் அந்த விதிகளை மீறுவார்களா அமைச்சர்கள்? ஐயோ! சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கிறார்களே என்று பொங்கியெழுவார்களே தமிழக அரசியல்வாதிகள்? சட்டத்தை மதிக்காத அமைச்சர்கள் எப்படி சட்டத்தை அமல்படுத்துவார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

செய்தி: க.சண்முகவடிவேல்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvannamalai-tn-minister-aadhav-arjuna-assistant-muslim-cap-temple-issue-karthigai-deepam-tamil-news-12685135