/indian-express-tamil/media/media_files/2026/10/11/delhi-protests-cjp-2026-10-11-20-20-30.jpg)
இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டங்கள்: அக்டோபர் 11-ம் தேதி புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை. Photograph: (Express photo by Gajendra Yadav)
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் பின்னணியில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வரலாறு, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறிய விதம் மற்றும் அதன் நிதி ஆதாரங்கள் குறித்த விரிவான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் எவ்வாறு அமைக்கப்பட்டது?
இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு நிரந்தர அரசியல் அமைப்பு சாசனம் சார்ந்த அமைப்பாகும். இதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்திய அரசியல் சாசனத்திற்கு இணங்க 1950 ஜனவரி 25-ல் இது நிறுவப்பட்டது.
நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள், இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான முழுமையான மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரங்களை அரசியல் சாசனம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள்?
தொடக்கத்தில், தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் (சி.இ.சி) மட்டுமே இருந்தார். தற்போது, இது ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களைக் (இ.சி.கள்) கொண்டுள்ளது. அவர்களை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, இதில் எது முதலாவதாக வருகிறதோ அதுவரையாகும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அந்தஸ்து, சம்பளம் மற்றும் பலன்கள் இவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. அதேபோல, தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமானால், உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தின் மூலமாக மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களைப் பற்றிப் பேசினாலும், அதில் ஆணையர்களின் எண்ணிக்கை பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. குடியரசுத் தலைவர் அவ்வப்போது நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்கலாம் என்றே அது கூறுகிறது.
ஒற்றை உறுப்பினரில் இருந்து 3 உறுப்பினர்களாக மாறிய வரலாறு
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகத் தேர்தல் ஆணையம் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட அமைப்பாகவே இயங்கி வந்தது. 9-வது மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்த நிலை மாறியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர்.வி.எஸ்.பேரி சாஸ்திரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே தேர்தல் ஆணையம் விரிவாக்கப்படக் முக்கியக் காரணம் என்று தேர்தல் ஆணையத்தில் 53 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய எஸ்.கே.மெண்டிரத்தா தெரிவித்துள்ளார்.
1989 (முதல் விரிவாக்கம்): 1989 அக்டோபர் 7 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம் இரண்டு புதிய தேர்தல் ஆணையர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அக்டோபர் 16 அன்று எஸ்.எஸ்.தனோவா மற்றும் வி.எஸ்.சீகல் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.
மீண்டும் ஒற்றை உறுப்பினர் அமைப்பாக மாற்றம்: 1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு, 1989 அக்டோபர் 7-ஆம் தேதியிட்ட உத்தரவை ரத்து செய்தது. தனோவா இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற போதிலும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
1991 சட்டம்: 1991-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி காலம் 65 வயதாகவும், பிற ஆணையர்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆணையம் மீண்டும் ஒற்றை உறுப்பினருடனேயே இயங்கியது.
1993-இல் 3 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக நிரந்தர மாற்றம்
1990 டிசம்பர் 12 அன்று டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். அவர் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சியை மிகக் கடுமையாக நிலைநாட்டத் தொடங்கியதால், அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1993 அக்டோபர் 1 அன்று தேர்தல் ஆணையத்தை மீண்டும் 3 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக விரிவாக்கம் செய்தது.
எம்.எஸ்.கில் மற்றும் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், அவசரச் சட்டம் மூலம் 1991-ம் ஆண்டின் சட்டம் திருத்தப்பட்டு, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூவருக்கும் சமமான அதிகாரங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டன. முடிவெடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்ற விதியும் சேர்க்கப்பட்டது.
இதை எதிர்த்து டி.என்.சேஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தலைமை நீதிபதி ஏ.எம்.அகமதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 1995 ஜூலை 14-ல் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. அன்று முதல் இன்று வரை இந்தியத் தேர்தல் ஆணையம் 3 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகவே இயங்கி வருகிறது.
தேர்தல் ஆணையத்திற்கு நிதி எவ்வாறு ஒதுக்கப்படுகிறது?
தேர்தல் ஆணையச் செயலகத்திற்குத் தனி வரவு செலவுத் திட்டம் உள்ளது. இது தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய நிதியமைச்சகத்திற்கும் இடையிலான நேரடி ஆலோசனையின் மூலம் இறுதி செய்யப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் நிதிப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் பொதுவாக அப்படியே ஏற்றுக்கொள்ளும்.
தேர்தல் நடத்துவதைத் தவிர வேறு என்ன பணிகளைச் செய்கிறது?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏ.க்கள்) தகுதிநீக்கம் செய்யும் விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
மேலும், தேர்தல்களில் முறைகேடுகளில் ஈடுபட்டு உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்களால் குற்றவாளி என நிரூபிக்கப்படும் நபர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட வேண்டுமா, அப்படி விதிக்கப்பட்டால் எத்தனை ஆண்டுகள் தடை விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த கருத்துகளையும் நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையத்திடமிருந்தே பெறுகின்றன.
11 10 2026
source https://tamil.indianexpress.com/explained/how-election-commission-was-set-up-3-members-history-12666552





