வியாழன், 22 அக்டோபர், 2026

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து

 

எழுதியவர்: சுபஜித் ராய்

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகளும் எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் செவ்வாய்க்கிழமை மும்பையில் சந்தித்துப் பேசினர். வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், முடிக்க வேண்டிய சில அம்சங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் ரூபியோ தெரிவித்தார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான பதற்றங்கள் மற்றும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது ஆகியவற்றால் இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இரு நாடுகளும் தங்களின் மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின.

அமெரிக்காவிடமிருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகரிக்கவும், அமெரிக்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை அதிக அளவில் வாங்கவும் இந்தியாவுக்கு ரூபியோ அழைப்பு விடுத்தார். 2030-ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக இலக்கை எட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் தளவாட விற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்டவற்றில் நமது உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தோம்” என்று ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

“மும்பையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம். அமெரிக்கா - இந்தியா மூலோபாயக் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தினோம்” என்று ரூபியோ சமூக வலைதளத்தில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் பெரிய அளவிலான நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், அதன் விநியோகச் சங்கிலிகளைப் பல்வகைப்படுத்துவதிலும் அமெரிக்காவுடனான எரிசக்தி வர்த்தகத்தை அதிகரிப்பது முக்கியப் பங்காற்றும் என்று செயலர் வலியுறுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், இருதரப்பு பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ரூபியோ பாராட்டியதாகவும், இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்தக்கூடிய அமெரிக்கத் தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை இந்தியா அதிக அளவில் வாங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் சூழல் உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் எட்டு மாதங்களாக நீடித்து வருவதால், இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் இந்த விவாதம் நடைபெற்றது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகளின் அனைத்துப் பரிமாணங்களையும் இரு தரப்பினரும் ஆய்வு செய்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகவும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்றதாகவும் அமைச்சகம் கூறியது.

இந்த ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தொடர இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியா - அமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ரூபியோவின் பயணம் எடுத்துக்காட்டுவதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது. ராணுவக் கூட்டாண்மை, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘இந்தியா - அமெரிக்கா காம்பாக்ட்’ (COMPACT) திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியது.

பின்னர், ஜெய்சங்கரும் ரூபியோவும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானையும் சந்தித்தனர்.

“முத்தரப்புக் கூட்டத்தை நடத்தினோம். எரிசக்தி, இணைப்புத் திட்டங்கள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது” என்று ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். பிராந்திய எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் பகிரப்பட்ட பொருளாதார முன்னுரிமைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

அமெரிக்கத் தூதர் நடத்திய ‘ஃப்ரீடம் 250’ (Freedom 250) வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஜெய்சங்கர் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“பாதுகாப்பு, எரிசக்தி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் அமெரிக்கா - இந்தியா ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து ரூபியோவும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இருதரப்பு கூட்டாண்மையில் ஏற்கெனவே உள்ள வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறோம்” என்று அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரூபியோ என்ன கூறினார்?

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, “வர்த்தக ஒப்பந்தங்களை வெளியுறவுத்துறை நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதில்லை என்பது வெளிப்படையானது. இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்ற முறையிலும் இது எங்களுக்கு முக்கியமானது.

“ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு எவ்வளவு நெருக்கமாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு நாம் நெருங்கிவிட்டோம். முடிக்க வேண்டிய சில அம்சங்கள் மட்டுமே உள்ளன. எனவே, இந்தப் பணி விரைவில் நிறைவடையும் என்று நம்புகிறோம். விரைவில் சில நல்ல செய்திகளை அறிவிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வாய்ப்புள்ளது. மிக விரைவில் ஓர் உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்து கருத்து

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிசக்தியை இறக்குமதி செய்வது குறித்துப் பேசிய ரூபியோ, இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த விரும்புவதாகத் தொடர்ந்து தெரிவித்து வருவதாகக் கூறினார்.

“எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்துவது புத்திசாலித்தனமான முடிவு. ஆனால், ஒரே நாளில் அதைச் செய்துவிட முடியாது. இந்த விஷயத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

“இது ரஷ்ய எண்ணெய் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த விரும்புகிறது என்பதுதான் முக்கியம். அதன் எரிசக்தித் தேவைகளில் ஒரு பகுதிக்கு அமெரிக்காவால் பங்களிக்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். வெனிசுலா உள்ளிட்ட பிற நாடுகள் குறித்தும் விவாதித்துள்ளோம். பல்வேறு எரிசக்தி ஆதாரங்களைக் கொண்ட வலுவான கூட்டாளிகள் இருப்பது எங்களுக்கும் நன்மை பயக்கும்” என்றார்.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கான தடைகளில் தற்காலிக விலக்கு அளிப்பது குறித்த முடிவை அமெரிக்கா எடுத்திருந்தது. இதற்கிடையே, ரஷ்யாவுடன் டீசல் கொள்முதல் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டதாகவும், ‘லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம், 2026’ தொடர்பான நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பேசிய ரூபியோ, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளில் விலக்கு அளிக்கும் முடிவில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தமும் கருத்தில் கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

வெனிசுலா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியாவுக்கு வாய்ப்பு

உலகின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியாவின் பங்கு குறித்தும், வெனிசுலாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் சுத்திகரிக்க முடியுமா என்பது குறித்தும் ரூபியோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் செல்லவிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

“இந்திய நிறுவனங்களால் அதைச் செய்ய முடியும். நாளை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இதுகுறித்து விவாதிப்போம். அவர்கள் ஏற்கெனவே இதைச் செய்துள்ளனர். கனமான கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் அவர்களுக்கு உள்ளது. வெனிசுலா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும்போது, இந்தியாவால் அதைச் சுத்திகரிக்க முடியும்” என்றார்.

எண்ணெய் உற்பத்தி மட்டுமின்றி, அதைச் சுத்திகரிக்கும் திறனும் முக்கியமானது என்று குறிப்பிட்ட ரூபியோ, “கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, எரிசக்தித் துறையில் நிபுணர்களாக மாறிய பலரும் இப்போது சுத்திகரிப்புத் திறனின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறார்கள். இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடு. அந்தப் பணியைச் செய்வதற்கான திறனும் அனுபவமும் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன” என்றார்.

மேலும், வெனிசுலாவில் இந்திய நிறுவனங்களுக்கு எண்ணெய் உற்பத்தி உரிமைகளும் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய நிறுவனங்களே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் கூறினார்.

“உலகம் முழுவதும் தற்போது நிலவும் சூழலால் ஏற்படக்கூடிய எண்ணெய் பற்றாக்குறையை வெனிசுலாவால் மட்டுமே முழுமையாக ஈடுசெய்ய முடியும் என்று நான் கூறவில்லை. ஆனால், காலப்போக்கில் அது நிச்சயமாக உதவக்கூடும். குறுகிய காலத்திலும் ஓரளவு நிவாரணம் அளிக்க முடியும்.

“இந்தியாவுடன் விவாதிக்கவிருக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்று. ஏற்கெனவே இதுகுறித்துப் பேசியுள்ளோம். இதைச் செய்ய இந்தியா தயாராக இருப்பதாகவும், விருப்பம் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. இருப்பினும், மதுரோ ஆட்சிக்கு எதிரான ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தடைகள் உள்ளிட்ட சில தடைகளைத் தீர்க்க வேண்டியிருக்கலாம்” என்றார்.

இந்தியாவுக்கு அடிக்கடி வர வேண்டும்: ரூபியோ

இந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்தியா வந்துள்ள ரூபியோ, இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டத் தொடர்புகள் குறித்து பேசினார்.

“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த ஆண்டு நான்கு முறை அமெரிக்காவுக்கு வந்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ளது. அமெரிக்காவின் முக்கியமான வர்த்தக மற்றும் வணிகக் கூட்டாளியாக இந்தியா இருக்கிறது. பாதுகாப்புத் துறையிலும் இரு நாடுகளும் அதிக ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. குவாட் அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும், வலுவான மூலோபாயக் கூட்டாளியாகவும் இந்தியா உள்ளது.

“எனவே, நாங்கள் இந்தியாவுக்கு போதுமான அளவு வருகை தருவதில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் அதிகமாக வர வேண்டும்” என்றார்.

டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் பலர் இந்தியாவுக்கு வந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார். “அமெரிக்காவுக்கு இந்தியா மிகவும் முக்கியமான கூட்டாளி” என்றும் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள தாஜ் மகால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற 26/11 பயங்கரவாதத் தாக்குதல் நினைவிடத்திலும் ரூபியோ அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, மும்பை விமான நிலையம் வந்தடைந்த ரூபியோவை மகாராஷ்டிர அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் வரவேற்றார். அமெரிக்கப் பிரிவுக்குப் பொறுப்பான இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கே. நாகராஜ் நாயுடுவும் உடனிருந்தார்.

ரூபியோவின் இந்தியப் பயணத்தை வரவேற்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தப் பயணம் இந்தியா - அமெரிக்கா விரிவான உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையின் பல்வேறு தூண்களின் கீழ் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

விசா கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியா - அமெரிக்கா உறவில் பதற்றம் நிலவி வரும் சூழலில் ரூபியோவின் பயணம் அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீரமைக்கும் முயற்சியாக ஜெய்சங்கருடனான அவரது சந்திப்பு பார்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் பயணத்துக்கான அடித்தளத்தை அமைக்கும் வகையிலும் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

சந்திப்புக்காக மும்பை தேர்வு செய்யப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் வர்த்தகத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் அதிக அளவில் உள்ள நகரமாக மும்பை இருப்பதால், அவர்களுடன் தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்தத் தேர்வு பார்க்கப்படுகிறது.


source https://tamil.indianexpress.com/india/india-us-trade-deal-nears-finalisation-marco-rubio-says-only-a-few-issues-remain-12693696