வியாழன், 22 அக்டோபர், 2026

கோவை தொடர் குண்டுவெடிப்புகள்: ஆயுள் தண்டனை கைதிகள் 5 பேருக்கு பரோல்; 1997-98-ல் நடந்தது என்ன?

 

கோவை தொடர் குண்டுவெடிப்புகள்: ஆயுள் தண்டனை கைதிகள் 5 பேருக்கு பரோல்; 1997-98-ல் நடந்தது என்ன?

basha kovai blast

1998 பிப்ரவரி 14 அன்று, கோயம்புத்தூர் முழுவதும் குண்டுகள் வெடித்தன. எஸ். ஏ. பாஷாவால் (இடதுபுறம்) நிறுவப்பட்ட அல்-உம்மா அமைப்பே இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள அமைப்பு என புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டனர். புகைப்படம்: விக்கிமீடியா காமன்ஸ்

1998 கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஐந்து பேருக்கு 60 நாட்கள் பரோல் வழங்கிய தமிழக வெற்றி கழகம் தலைமையிலான தமிழக அரசின் முடிவுக்கு, பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பரோல் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த விவகாரம், பல பத்தாண்டுகால துயரம், தண்டனை மற்றும் அரசியல் மோதல்களால் உருவான ஒரு விவாதத்தை மீண்டும் திறந்துள்ளது.

58 பேரைக் கொன்று, பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியை இலக்காகக் கொண்ட இந்தத் தாக்குதல்களுக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பு, மதக்கலவரமும் காவல்துறை துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்திருந்தன; அதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இரண்டு நிகழ்வுகளும், மதப் பிளவு, காவல்துறையின் தோல்விகள் மற்றும் ஒரு பயங்கரவாத சதித்திட்டம் ஆகியவற்றின் ஒன்றோடொன்று இணைந்த வரலாற்றை உருவாக்குகின்றன. இவை கோயம்புத்தூரின் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்து, அப்போதைய தி.மு.க அரசுக்கு நீடித்த அரசியல் சேதத்தை ஏற்படுத்தின. தொடர் குண்டுவெடிப்புகளின் வரலாறு, அதற்கு முந்தைய மதக்கலவரம் மற்றும் அதன் பின்விளைவுகளை நாம் நினைவு கூர்வோம்.

கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு முன்பு என்ன நடந்தது?

1980-களின் முற்பகுதியிலிருந்து கோயம்புத்தூரின் மதக்கலவரப் பதற்றங்கள் ஆழமடைந்து வந்தன. இந்து வலதுசாரித் தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகள், முஸ்லிம் குழுக்களின் எதிர் அணிதிரட்டல்கள் மற்றும் பதிலடிக் கொலைகள் ஆகியவை படிப்படியாகப் பிளவுகளை வலுப்படுத்தின. 1992-ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு, ஏற்கெனவே அபாயகரமானதாக இருந்த சூழலை மேலும் தீவிரப்படுத்தியது.

1997 நவம்பர் 29 அன்று, கோயம்புத்தூரில் 1993-ல் எஸ்.ஏ. பாஷாவால் நிறுவப்பட்ட அல்-உம்மா என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களால் போக்குவரத்து காவலர் ஆர். செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். செல்வராஜின் கொலை காவல்துறையினரிடையே கோபத்தைத் தூண்டியது. சில காவலர்கள் தங்கள் கடமையை விட்டு விலகியதால், ஒரு பாதுகாப்பு வெற்றிடம் உருவானது. அந்தச் சூழலைப் பயன்படுத்தி இந்து தீவிரவாதிகள் முஸ்லிம்களையும் அவர்களது வணிக நிறுவனங்களையும் தாக்கினர்.

அதனைத் தொடர்ந்து நடந்த மதக்கலவரம் மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பதினெட்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். கடைகள் சூறையாடப்பட்டன, சொத்துக்கள் அழிக்கப்பட்டன, மேலும் ராணுவமும் மத்தியப் படைகளும் நிலைமையைச் சீரமைப்பதற்கு முன்பு குடும்பங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின.

மனித உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் அமைப்பான மக்கள் குடிமை உரிமைகள் சங்கத்தின் (PUCL) உண்மை கண்டறியும் குழு, காவல்துறையின் சில பிரிவுகள் இந்து தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை அதன் அறிக்கையில் அடங்கும்.

இந்த மரணங்கள் பிற்காலத்தில் தீவிரவாதிகளால் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களும் காணொளிகளும் பரப்பப்பட்டன. ஒரு தரப்பு பொதுமக்களின் துயரம், மற்றொரு தரப்பு பொதுமக்களுக்கு எதிரான ஒரு சதித்திட்டத்திற்கு மூலப்பொருளாக மாற்றப்பட்டது.

1998 பிப்ரவரியில் கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் போது என்ன நடந்தது?

1998 பிப்ரவரி 14 அன்று, ஆர்.எஸ். புரத்தில் அத்வானியின் தேர்தல் பொதுக்கூட்டத்திற்காக மக்கள் திரண்டிருந்த வேளையில், கோயம்புத்தூர் முழுவதும் குண்டுகள் வெடித்தன. அத்வானியின் விமானம் தாமதமானதால், குண்டுவெடிப்புகள் தொடங்கியபோது அத்வானி இன்னும் பிரச்சாரச் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.

தாக்குதல்கள் பொதுக்கூட்டம் நடந்த இடத்தைத் தாண்டி, வணிக நிறுவனங்கள், போக்குவரத்து வசதிகள், பா.ஜ.க தேர்தல் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை எனப் பல இடங்களிலும் நிகழ்ந்தன. கார்கள், இருசக்கர வாகனங்கள், பைகள் மற்றும் அன்னாசிப்பழம் விற்கும் தள்ளுவண்டி ஆகியவற்றில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கோயம்புத்தூரில் வெடிவிபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் சிதைந்த எச்சங்கள். புகைப்படம்: எக்ஸ்பிரஸ்

இந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக இருந்தது; 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிக்காத நிலையில் இருந்த பல வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த ஒரு காரில் சுமார் 70 கிலோ வெடிபொருட்கள் இருந்தன; அவற்றை அகற்றுவதற்கு பல நாட்கள் தயாரிப்புப் பணிகள் தேவைப்பட்டன.

இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் 'அல்-உம்மா' (Al-Umma) என்ற அமைப்பு இருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்; இதனைத் தொடர்ந்து அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது.

நீதிபதி கோகுலகிருஷ்ணன் ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் என்ன?

முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) அரசு, 1997 நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற மத மோதல்கள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்புத் தலைமை நீதிபதி பி.ஆர். கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. 1998 பிப்ரவரி 22 அன்று, இந்த ஆணையத்திடம் வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு முந்தைய சூழல்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் வெவ்வேறு நிகழ்வுகள் தொடர்பானவை என்பதால், அவற்றை தனித்தனியாகப் பார்க்க வேண்டும்.

1998 நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப அறிக்கையில், 1997 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு அவசியமானது என்று ஆணையம் நியாயப்படுத்தியது. அதே சமயம், காவலர் செல்வராஜ் படுகொலைக்குப் பிறகு, காவல் ஆணையரின் உத்தரவுகளை மீறி பணியைச் செய்ய மறுத்த காவலர்கள் மீது குற்றம் சாட்டியதுடன், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.

தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் குறித்து குறிப்பிடுகையில், முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கமே இந்தச் சதித்திட்டத்திற்குக் காரணம் என்று ஆணையம் கண்டறிந்தது. 2000-ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் இறுதி அறிக்கையில், 'அல்-உம்மா' அமைப்பு இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஏதுவாக இருந்த கண்காணிப்புத் தோல்விகள் குறித்து விமர்சிக்கப்பட்டு இருந்தது.

இந்த வன்முறை அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது?

தெருக்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் கோயம்புத்தூரில் அச்சம் நீடித்தது. 1998 நவம்பர் மாதம் நிகழ்ந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கூடுதலாக 4,000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஏற்கனவே இருந்த 12 வாகனங்களுடன், சைரன் பொருத்தப்பட்ட மேலும் 30 ஜீப்புகள் சேர்க்கப்பட்டன; 17 சோதனைச் சாவடிகளும், 32 காவல் கண்காணிப்பு மையங்களும் அமைக்கப்பட்டன. மேலும், அமைதிக் குழுக்களும் உருவாக்கப்பட்டன.

கோட்டைமேடு, உக்கடம் மற்றும் அல்-அமீன் காலனி போன்ற முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தொடர்ச்சியான சோதனைகளும், ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான சந்தேகப் பார்வையும் ஒருவித பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தின. குண்டுவெடிப்புகளை எதிர்த்த முஸ்லிம் குடியிருப்பாளர்கள் கூட, தங்கள் கண்டனத்தை மற்றவர்கள் நம்பமாட்டார்கள் என்று கருதினர்.

அதே சமயம், ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்தன. மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தன; மருத்துவர்கள் தங்கள் சொந்தத் துயரங்களையும் மீறிப் பணியாற்றினர்; உள்ளூர் மக்கள் குண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினருக்கு ஆதரவளித்தனர். அந்தச் சூழலில், சந்தேகப் பார்வையுடன் கூடவே கருணையும் கலந்த ஒரு எதிர்வினையை கோவை நகர மக்கள் வெளிப்படுத்தினர்.

தி.மு.க ஏன் அரசியல் ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தது?

கருணாநிதி தலைமையிலான அரசு, காவல்துறையின் மெத்தனப்போக்கு மற்றும் உளவுத்துறை எச்சரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. பா.ஜ.க.,வும் அதன் கூட்டாளியான ஜெயலலிதாவின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (அ.தி.மு.க), இந்த குண்டுவெடிப்புகளைக் காரணம் காட்டி அப்போதைய தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்தன. மேலும், அதற்கு முன்பு நடந்த வன்முறைகளின் போது தங்களைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக முஸ்லிம் மக்களும் கேள்வி எழுப்பினர்.

இதன் விளைவாக, 1998-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது; மாநிலத்திலிருந்த 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே அக்கூட்டணி வெற்றி பெற்றது. 1999-ல் பா.ஜ.க.,வுடனான கூட்டணியிலிருந்து அ.தி.மு.க விலகியதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க இணைந்தது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அக்கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைத்தது.

பாஷாவின் பரோல் (தற்காலிக விடுதலை) தற்போதைய விவகாரத்தில் எவ்வாறு பொருந்துகிறது?

2007-ல், ஒரு சிறப்பு நீதிமன்றம் 158 பேருக்குத் தண்டனை வழங்கியது. இதில் எஸ்.ஏ. பாஷா மற்றும் முகமது அன்சாரி உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தனது இறுதிக்காலகட்டத்தில் பரோலில் வெளியே வந்திருந்த பாஷா, 2024 டிசம்பரில் தனது 84-வது வயதில் காலமானார். பாஷாவின் மறைவுக்குப் பிறகு, வழக்கறிஞர் பிரபு பாலசுப்பிரமணியன் ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்; நிலைமை தனது கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகவும், அதைத் தடுப்பதற்கு முன்பே அனைத்தும் கைமீறிப் போய்விட்டதாகவும் பாஷா அவரிடம் ஒருமுறை கூறியிருந்தார். அல்-உம்மா அமைப்பின் நிறுவனரான பாஷாவை அறிந்திருந்த பாலசுப்பிரமணியன், பாஷா தனது செயல்களுக்காக வருந்தியதையும், தனது பேரக் குழந்தைகளைப் பார்க்க விரும்பியதையும் விவரித்தார்.

இத்தகைய நினைவுகூரல்கள், ஒரு முதிய கைதி தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட விடுத்த கோரிக்கைகளுக்கான காரணத்தை விளக்குகின்றன; அதே வேளையில், இவை அவர் மீதான தண்டனையையோ அல்லது பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த துயரத்தையோ துடைத்துவிட முடியாது.


source https://tamil.indianexpress.com/explained/coimbatore-serial-blasts-as-5-life-convicts-get-parole-what-happened-in-1997-98-12696430