சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசுமுறை நிகழ்ச்சி இது என்பதால், முதலமைச்சரின் உரை அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி அவர் தனது உரையைத் தொடங்கினார்.
சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், புறநகர்ப் பகுதிகளை விரைவாக இணைக்கவும் மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் மிக அவசியமானவை என்று குறிப்பிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், இத்திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதிப் பங்கீட்டை எவ்விதத் தாமதமுமின்றி முழுமையாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்குவதற்கான மத்திய அரசின் ஒப்புதல்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தினார்.
மாநிலத்தின் நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்தார். இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசு சந்திக்கும் நிதி நெருக்கடிகளைக் சுட்டிக்காட்டிய அவர், வெள்ள நிவாரணம் மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகளுக்காகத் தமிழகம் கோரியுள்ள சிறப்பு நிதித் தொகுப்பை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாநிலங்களின் நிதி தன்னாட்சியை மதித்து, வரப் பகிர்வில் தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் தொழில்வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில், செமிகண்டக்டர் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் மின்சார வாகனத் தயாரிப்பு மண்டலங்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பச் சிறப்பு மண்டலங்களை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டி போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப பங்களிப்போடு, கிராமப்புற மாணவர்களுக்கான தொழில்முறை திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசின் ஆதரவு தேவை என்றும், இதற்கான சிறப்பு நிதியை மத்திய கல்வி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதுடன், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் கைது நடவடிக்கைகள் மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர ராஜதந்திரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார். தென்னக ஆறுகளை இணைக்கும் தொலைநோக்கு திட்டங்கள், ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துவது ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்த அவர், தமிழகத்தின் நியாயமான தேவைகளை மத்திய அரசு காலதாமதமின்றி நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தித் தனது உரையை நிறைவு செய்தார்.
11 10 2026
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-vijay-speech-pm-modi-launches-13000-crore-projects-chennai-iit-12665996





