/indian-express-tamil/media/media_files/2026/10/14/jantar-mantar-denotified-delhi-police-protest-sites-world-protest-venues-2026-10-14-09-27-51.jpg)
ஜந்தர் மந்தர் ரத்து எதிரொலி: உலக நாடுகளின் முக்கிய ஆர்ப்பாட்ட சதுக்கங்களின் வரலாறு
இந்தியத் தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதியை, போராட்டக் களங்களுக்கான பட்டியலில் இருந்து டெல்லி காவல் துறை நீக்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையர் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டங்கள் தீவிரமடைந்த சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வானியல் ஆய்வு மையம், இந்தியாவின் மிக முக்கியமான சமூக, அரசியல் மாற்றங்களுக்குச் சாட்சியாக நின்றுள்ளது. 2011-ல் அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம், 2012-ல் நடந்த 'நீதி வேண்டி நிர்பயா' இயக்கம், 2017-ல் தமிழக விவசாயிகள் நடத்திய வீரியமிக்க போராட்டங்கள், ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் எனப் பல வரலாற்று நிகழ்வுகள் இங்குதான் அரங்கேறின.
அரசியல் எதிர்ப்புகளையும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் உரக்கப் பேசும் இதுபோன்ற "சுதந்திர பேச்சு மண்டலங்கள்" (Free-speech zones) உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. கார்ல் மார்க்ஸ், விளாடிமிர் லெனின், நெல்சன் மண்டேலா, ஜார்ஜ் ஆர்வெல் போன்ற மாபெரும் தலைவர்களின் உரைகளுக்கும், உலகை மாற்றிய பல இயக்கங்களுக்கும் சாட்சியாக விளங்கும் சில சர்வதேச போராட்டக் களங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
1. லண்டனின் ஸ்பீக்கர்ஸ் கார்னர், ஹைட் பார்க் (Hyde Park, London)
1637-ஆம் ஆண்டில் மன்னர் முதலாம் சார்லஸ் இந்த பூங்காவைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். 1783 வரை இங்கு 'டைபர்ன் கேலோஸ்' (Tyburn Gallows) என்ற மரண தண்டனை நிறைவேற்றும் இடம் இருந்தது. அங்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, கைதிகள் தங்களின் கடைசி உரையை நிகழ்த்த அனுமதிக்கப்பட்டனர்.
மரண தண்டனை மையம் மூடி மறைந்தாலும், அந்த இடத்தில் உரையாற்றும் வழக்கம் தொடர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, பூங்காவின் வடகிழக்கு பகுதியான 'ஸ்பீக்கர்ஸ் கார்னர்' லண்டன் மக்களின் பேச்சு சுதந்திர மையமாக மாறியது. 1872-ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் இது அதிகாரப்பூர்வ பேச்சு சுதந்திர இடமாக அறிவிக்கப்பட்டது.
1900-களின் தொடக்கத்தில் பெண்களுக்கான வாக்குரிமை கோரிய 'சஃப்ரஜெட்' (Suffragette) இயக்கத்தின் போது இந்த இடம் பெரும் முக்கியத்துவம் பெற்றது. நெல்சன் மண்டேலா, கார்ல் மார்க்ஸ், லெனின், ஜார்ஜ் ஆர்வெல், வில்லியம் மோரிஸ் போன்ற மாபெரும் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் புரட்சிகர உரைகள் இந்த மண்ணில் எதிரொலித்துள்ளன. லண்டனின் முதல் 'பிரைட் பேரணி' (Pride march) தொடங்கியதும் இந்த இடத்தில்தான்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/10/14/world-protest-venues-speakers-corner-2026-10-14-10-10-51.jpg)
2. ட்ராஃபல்கர் சதுக்கம், லண்டன் (Trafalgar Square, London)
அருங்காட்சியகங்கள், பண்பாட்டு மையங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களால் சூழப்பட்ட ட்ராஃபல்கர் சதுக்கம், லண்டனின் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டக் களமாகும். பெண்களின் வாக்குரிமை போராட்டம், வியட்நாம் போர் எதிர்ப்பு, 2000-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், காலநிலை மாற்றப் பேரணிகள் எனப் பல நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளன.
1887 நவம்பர் 13 அன்று, வேலை வாய்ப்பின்மைக்கு எதிராக அமைதியாகப் போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலால் இந்த இடம் 'இரத்த ஞாயிறு' (Bloody Sunday) நிகழ்வுக்குச் சாட்சியானது. 1961-ல் பிரிட்டிஷ் போர் எதிர்ப்பு அமைப்புகள் அமைதியான முறையில் அரசிற்கு எதிராக மிகப்பெரிய சிவில் மறுப்புப் போராட்டத்தை இங்கு நடத்தின. இன்றளவும் வார இறுதி நாட்களில் அரசியல், மதம் மற்றும் குடிமக்கள் உரிமை தொடர்பான கூட்டங்கள் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/10/14/union-square-in-manhattan-2026-10-14-10-11-28.jpg)
3. யூனியன் சதுக்கம், நியூயார்க் (Union Square, New York)
அமெரிக்க தொழிலாளர் இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் இதுவாகும். இதன் வரலாற்றுச் சிறப்பைக் கருதி 1997-ல் அமெரிக்க அரசு இதை 'தேசிய வரலாற்றுச் சின்னமாக' அறிவித்தது.
1882 செப்டம்பர் மாதத்தில், சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு யூனியன் சதுக்கத்தின் வீதிகளில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் தொடர்ச்சியாகவே, 1894 ஜூன் 28 அன்று அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லேண்ட் தொழிலாளர் தினத்தை (Labor Day) அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார். அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியின் 8 அடி உயர வெண்கலச் சிலையும் இந்தப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/10/14/trafalgar-square-2026-10-14-10-12-15.jpg)
4. லஃபாயெட் சதுக்கம் மற்றும் கேபிட்டல் வளாகம், வாஷிங்டன் (Lafayette Square, US)
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு நேர் எதிரே அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் லஃபாயெட் சதுக்கம். 'அதிபர் பூங்கா' என்று அழைக்கப்பட்ட இந்த இடம், அமெரிக்க வரலாற்றின் எண்ணற்ற போராட்டங்களைக் கண்டுள்ளது.
பெண்கள் வாக்குரிமை போராட்டம், 'பிளாக் லைவ்ஸ் மேட்டர்' (Black Lives Matter) இயக்கம், 1973 வாட்டர்கேட் ஊழல் எதிர்ப்பு, டிரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் எனப் பல அதிர்வலைகள் இங்கு உருவாகியுள்ளன. 1991-ல் ஈராக் போருக்கு எதிரான போராட்டக்காரர்கள் எழுப்பிய முழக்கங்கள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்ஷின் படுக்கையறை வரை கேட்டதால், அவர் தூக்கமில்லாமல் தவித்ததாகப் பதிவுகள் உண்டு.
அதேபோல், அமெரிக்க கேபிட்டல் வளாகப் பகுதியில் 1963 ஆகஸ்ட் 28 அன்று நடந்த 'வேலை மற்றும் சுதந்திரத்திற்கான பேரணியில்' 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். இந்த மேடையில்தான் மார்ட்டின் லூதர் கிங் தனது புகழ்பெற்ற "எனக்கொரு கனவு இருக்கிறது" (I Have a Dream) என்ற உரையை நிகழ்த்தினார். இது அமெரிக்க சிவில் உரிமைச் சட்ட உருவாக்கத்திற்கு முக்கியக் காரணியாக அமைந்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/10/14/aerial-view-of-presidents-park-in-washington-2026-10-14-10-12-47.jpg)
5. பிளேஸ் டி லா பாஸ்டில், பாரிஸ் (Place de la Bastille, Paris)
பிரெஞ்சுப் புரட்சியின் உறைவிடமாகவும், ஜனநாயகத்தின் அடையாளமாகவும் திகழும் இடம் பாரிஸில் உள்ள 'பிளேஸ் டி லா பாஸ்டில்'. 1789 பிரெஞ்சுப் புரட்சியின் போது, முடியாட்சியின் சர்வாதிகார அடையாளமாகத் திகழ்ந்த பாஸ்டில் சிறைச்சாலை மக்களால் தகர்க்கப்பட்டது.
இன்று அந்தச் சிறையின் எச்சங்கள் எதுவும் இல்லை என்றாலும், 1830 ஜூலை புரட்சியை நினைவுபடுத்தும் வகையில் 'ஜூலை தூண்' (July Column) மையப்பகுதியில் கம்பீரமாக நிற்கிறது. இன்றும் பிரான்ஸ் நாட்டின் முக்கிய அரசியல் பேரணிகளுக்கும், வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கும், குடிமக்களின் உரிமைக்கான நடைபயணங்களுக்கும் இந்த சதுக்கமே முதன்மை இடமாகத் திகழ்கிறது.
ஜந்தர் மந்தர் போன்ற நகர்ப்புறப் போராட்டக் களங்கள் வெறும் புவியியல் பகுதிகள் மட்டுமல்ல; அவை எளிய மனிதனின் ஜனநாயகக் குரலை அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளுக்கு எட்ட வைக்கும் சுதந்திரத்தின் அடையாளங்கள்.
source https://tamil.indianexpress.com/explained/jantar-mantar-denotified-delhi-police-protest-sites-world-protest-venues-12673954





