/indian-express-tamil/media/media_files/2026/10/27/anbil-mahesh-arrested-puzhal-prison100-crore-scam-case-2026-10-27-07-45-37.jpg)
மருத்துவப் பரிசோதனைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்: அன்பில் மகேஷ் வழக்கில் நள்ளிரவு பரபரப்பு!
தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலித்த வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அனுமதி சான்றிதழ்கள் வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அதன்பின்னர், பலத்த பாதுகாப்புடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டன.
மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, இரவு 10 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்யமூர்த்தி முன்பு அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு தரப்பிற்கும், தி.மு.க வழக்கறிஞர்களுக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது.
தி.மு.க மூத்த வழக்கறிஞர் பி. வில்சன்,
"அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட முறை சட்டப்பூர்வமாக இல்லை. முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட உடனேயே நள்ளிரவில் அவசரம் அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவர் ஒன்றும் தப்பி ஓடும் தீவிரவாதியோ, பயங்கரவாதியோ இல்லை. ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். எனவே அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது" என்று வாதிட்டார்.
காவலத்துறை தரப்பில்:
"இந்த வழக்கில் ஆன்லைன் மூலமாகவும், நேரடி பணப் பரிமாற்றம் மூலமாகவும் சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. சட்டப்படியே அனைத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. எனவே இவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம்" என்று வாதிடப்பட்டது.
நவம்பர் 6 வரை சிறை; புழல் சிறையில் அடைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சத்யமூர்த்தி, நள்ளிரவு 12.20 மணியளவில் தீர்ப்பளித்தார்.
அதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு புழல் சிறையில் முதல் வகுப்பு சிறைப்பிரிவு வழங்கவும், மருத்துவர்களின் பரிந்துரைப்படி உணவு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதைத் தொடர்ந்து, நள்ளிரவிலும் சென்னை உயர் நீதிமன்ற வளாகம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகப் பகுதிகளில் ஏராளமான தி.மு.க வழக்கறிஞர்களும், கட்சித் தொண்டர்களும் திரண்டனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோதும், விசாரணைக்குப் பின் சிறைக்கு அழைத்துச் சென்றபோதும் தொண்டர்கள் காவல் துறைக்கும் அரசுக்கும் எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
source https://tamil.indianexpress.com/tamilnadu/anbil-mahesh-arrested-puzhal-prison100-crore-scam-case-12755925





