சனி, 10 அக்டோபர், 2026

போராட்டங்களுக்கும் உழைப்புக்கும் என்ன மரியாதை?

 10 10 2026 

suganthi cpm

இந்த இடைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள் என்றாலும், மக்களுக்காக போராடு கட்சியை இவ்வளவு மோசமாக மக்கள் கைவிட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு சோகமான முடிவு.

தமிழ்நாட்டில் எளிய மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் இடைவிடாது களமாடி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடத் தாண்ட முடியாமல் டெபாசிட் இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சுகந்தி உள்ளிட்ட மக்கள் போராளிகள் இத்தேர்தலில் களமிறங்கியும் மக்கள் மத்தியில் வாக்குகள் கிடைக்காதது, "தமிழ்நாட்டில் உழைப்புக்கும் போராட்டங்களுக்கும் என்ன மரியாதை?" என்ற ஆதங்கத்தையும் கம்யூனிஸ்டுகளின் தேர்தல் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் எந்த மக்கள் போராட்டமாக இருந்தாலும் அதை முன்னெடுப்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினராக இருப்பார்கள். அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டமாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி எல்லா போராட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பார்கள்.

ஒரு பிரபலம் திடீரென ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ எம்.பி அமைச்சர் ஆவது போல கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து திடீரென ஒரே நாளில் எம்.எல்.ஏ, எம்.பி ஆகி விட முடியாது. அதற்கு கட்சி அனுமதிக்காது. கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை எந்த தனிநபர்களையுடம்விட கட்சிதான் அதிகாரம் மிக்கது. கட்சிதான் முக்கியம்.


ஒரு காலத்தில் சென்னை மாகாண சட்சபையின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவில் இரண்டாயிரம் வாக்குகள்கூட பெறாமல் தரை தட்டி நிற்கிறது. மக்களுக்காக போராடும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்காதது ஏன்? டெபாசிட் பெற முடியாத அளவுக்கு மக்களுக்காக போராடும் கட்சியை மக்கள் கைவிட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்களுக்கு இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்றபோது காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல் கட்சிகள் ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்து அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கின்றன. ஆனால், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்ததோடு விஜயின் த.வெ.க அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அ.தி.மு.க.வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்ததை குதிரை பேரம் என்று கூறி கடுமையாக விமர்சித்தனர்.

அதோடு விடாமல், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்து களம் இறங்கின. இதில் வெற்றி பெற முடியாது என்றலும் கம்யூனிஸ்ட்டுகள் பலமாக நிற்பார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியைச் சேராதவர்களும் நம்பினார்கள். ஆனால், மதுராந்தகம் தொகுதியில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்ட சுகந்தி 1986 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். அதேபோல, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட லட்சுமணன் 1,157 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த இடைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள் என்றாலும், மக்களுக்காக போராடு கட்சியை இவ்வளவு மோசமாக மக்கள் கைவிட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு சோகமான முடிவு. 

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சுகந்தி, தமிழகத்தின் முன்னணி சமூகப் போராளியாகவும் அறியப்படுகிறார். உழைக்கும் மக்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்று போராடி வரும் ஒரு தீவிர அரசியல் செயல்பாட்டாளர் ஆவார்.

சுகந்தி: யார் இவர்?

சுகந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்திற்காகவும் மிக முக்கியப் பங்காற்றி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் (TNUEF) பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், அநீதிகள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக பல முன்னணிப் போராட்டங்களை இவர் முன்னெடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான நீதியும், பாதுகாப்பும் கிடைப்பதை உறுதி செய்யக் களத்தில் நின்று போராடியுள்ளார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளராக, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் நிலவும் சாதிய பாகுபாடுகள், தீண்டாமைச் சுவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை வழிநடத்தியுள்ளார்.

மத்திய அரசின் விவசாயச் சட்டத் திருத்தங்கள் மற்றும் ஏழை எளிய நெசவாளர்கள், பொதுமக்களைப் பாதிக்கும் மின்சாரத் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக சி.பி.எம் நடத்திய பல்வேறு மக்கள் திரள் போராட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்களில் முன்னிலை வகித்து தீவிரமாகப் பங்காற்றியுள்ளார்.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சி.பி.எம் வேட்பாளராகப் போட்டியிட்ட சுகந்தி மிகவும் குறைவான வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். 

இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த தோல்வி தமிழ்நாட்டில் போராட்டங்களுக்கும் உழைப்புக்கும் என்ன மரியாதை இருக்கிறது? கம்யூனிஸ்ட்களின் வாக்கு இவ்வளவுதானா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

தேர்தல் களத்தில் மக்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி வெற்றிபெற வாய்ப்பில்லாமல் போனாலும், "எங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று எப்போதும் மக்களை நாங்கள் குற்றப்படுத்தியதில்லை; எப்போதும் போராடுகிற எங்களுக்குத் தேர்தலும் ஒரு போராட்டமே, அறம் சார்ந்த அரசியலின் அடையாளமாகத் தொடர்ந்து உழைக்கும் மக்களுக்காகப் பணியாற்றுவோம்" என்று மக்கள் நலனுக்கான தனது அரசியல் போராட்டப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-cpm-very-poor-perfomancemadurantakam-dharapuram-by-election-results-analysis-12661614