திங்கள், 19 அக்டோபர், 2026

டிராயின் அதிரடி உத்தரவு: இனி தேவையில்லாமல் டேட்டாவுக்கு காசு தர வேணாம்;

 source https://tamil.indianexpress.com/technology/airtel-launches-voice-only-prepaid-plans-after-govt-mandate-12687744


இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விதிகளின் கீழ், டேட்டா இல்லாத வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் மட்டும் கொண்ட புதிய பிரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்திய முதல் டெலிகாம் நிறுவனமாக பாரதி ஏர்டெல் அவதாரம் எடுத்துள்ளது. அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். சேவைகள் மட்டுமே கொண்ட ரீசாா்ஜ் திட்டங்களை, தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதலாக அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டிராய் விதித்த கெடுவிற்கு முன்பாகவே ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206 ஆகிய மூன்று கட்டண திட்டங்களை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது. இவை தற்போது ஏர்டெல் இணையதளம் மற்றும் செயலியில் நேரலையில் உள்ளன. இன்டர்நெட் தேவையில்லாமல், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் அதிகமாகப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  இந்த மூன்று திட்டங்களிலுமே வரம்பற்ற அன்லிமிடெட் அழைப்புகள் (Local, STD, Roaming) மற்றும் 300 எஸ்.எம்.எஸ் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

புதிய ஏர்டெல் திட்டங்களின் விவரங்கள்

ரூ.185 திட்டம்: இதுவே மிகவும் மலிவான திட்டமாகும். இதன் சேவைக்காலம்  28 நாட்கள் ஆகும்.

ரூ. 203 திட்டம்: ரூ.185 திட்டத்தின் அதே அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 300 எஸ்.எம்.எஸ் சலுகைகளுடன் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ. 206 திட்டம்: இது காலண்டர் மாத செல்லுபடியாகும் திட்டமாகும் (எடுத்துக்காட்டாக, பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்கள், மார்ச் மாதத்திற்கு 31 நாட்கள் என அந்தந்த மாதங்களின் நாட்களுக்கு ஏற்ப மாறும்).

இந்த மூன்று திட்டங்களிலுமே கூடுதல் கட்டணமின்றி இலவசமாக 'ஹலோடியூன்ஸ்' அமைத்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

டிராய் புதிய விதிகள் என்ன சொல்கின்றன?

செப்டம்பர் 2026-ல் டிராய் அறிவித்த புதிய விதிகளின்படி, ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் 30 நாட்கள் கெடு விதிக்கப்பட்டது. அதன்படி, இன்டர்நெட் டேட்டா சேர்க்கப்படாத 'வாய்ஸ் + எஸ்.எம்.எஸ்' திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இதன் பின்னணி என்ன?

பட்டன் போன் வைத்திருப்பவர்கள் மற்றும் டேட்டாவைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள், தங்களுக்குத் தேவையில்லாத மொபைல் டேட்டாவிற்கும் சேர்த்து பணம் செலுத்துவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.