ஞாயிறு, 18 அக்டோபர், 2026

வட அமெரிக்காவில் வர்த்தக இடையூறுகள்; இந்தியா தனக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்தலாம்?

 எழுத்து: ஸ்நேஹா பகத் மற்றும் ராதிகா குப்தா

மொழியாக்கம்: எம். கோபால் 

ஐரோப்பா, வளைகுடா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் தொடர்ச்சியாக விரைவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் மூலம், தொழிற்புரட்சி 4.0-க்குத் தேவையான தடையற்ற விநியோக வழிகள், மூலதனம் மற்றும் முன்னணித் தொழில்நுட்பங்களைப் பாதுகாக்கும் வகையில் தனது பொருளாதார ராஜதந்திரம் மறுவடிவமைக்கப்பட்டு வருவதை இந்தியா உலகிற்கு உணர்த்தியுள்ளது. தற்போது, 2026-ஆம் ஆண்டின் இறுதியில், இந்த முக்கிய மறுசீரமைப்பு அதன் தீர்க்கமான வட அமெரிக்கக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.

தற்போது, கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனடாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுவை இந்தியாவிற்கு வருகை தர ஏற்பாடு  செய்து உபசரித்துக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 300 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கான (CEPA) பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 70 பில்லியன் கனடிய டாலராக (50 பில்லியன் அமெரிக்க டாலர்) இரட்டிப்பாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே சமயம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் இந்தியா வருகிறார். இந்த இரட்டை இராஜதந்திரப் பாதைகள், கனடா மற்றும் அமெரிக்காவுடனான தனித்தனியான உறவுகளிலிருந்து விலகி, வட அமெரிக்கா முழுவதும் பரஸ்பரம் வலுவூட்டும் ஒரு தடத்தை நோக்கிச் செல்வதற்கு இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.

பாரம்பரியமாக மூலப்பொருட்களின் வர்த்தகத்தையே சார்ந்திருந்த நிலையிலிருந்து விலகி, இந்தியா-கனடா இருதரப்பு செயல்திட்டம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை நோக்கிச் செல்கிறது. ஒரு காலத்தில் ஒருவழிப் புலம்பெயர்வால் மட்டும் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இந்த உறவு, புதிய கூட்டுத் திறமை மற்றும் புத்தாக்க உத்தியின் மூலம் திறமையாளர் இடப்பெயர்வு மற்றும் கூட்டு ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு மறுவடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதேபோல், மூலதன வருகை என்பது, கனடிய ஓய்வூதிய நிதிகளின் செயலற்ற, ஒருவழி முதலீட்டு ஒதுக்கீடுகளிலிருந்து, செயல்திறன் மிக்க கூட்டு முதலீட்டுத் தளங்கள், தரவு மையங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தித் துறைகளில் தொழில்துறை கூட்டு முயற்சிகள், மற்றும் இந்தியா-கனடா பருப்புப் புரத சிறப்பு மையம் போன்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூட்டாண்மைகளாக மாறி வருகின்றன. 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான கேம்கோ சிவில் அணுசக்தி யுரேனியம் ஒப்பந்தம், முக்கிய கனிமங்களின் மதிப்புச் சங்கிலி ஒருங்கிணைப்பு, மற்றும் மேம்பட்ட பொட்டாஷ் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றால் முன்னிலைப்படுத்தப்பட்ட எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பின் முக்கிய அஸ்திவாரங்கள், ஒரு நீடித்த வர்த்தக அடித்தளத்தை வழங்குகின்றன. இந்த கூட்டாட்சி உத்வேகம், கனடாவின் சஸ்காட்செவன், ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத் தூதரகங்களின் தலைமையிலான ஆற்றல்மிக்க துணை-தேசிய ராஜதந்திரத்தாலும் மேலும் உறுதிப்படுத்தப்பட்டு வேகப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவுடனான இந்த மறுசீரமைப்பு, இந்தியா-அமெரிக்க உறவை வலுப்படுத்தவும், மேலும் வலுப்படுத்தப்படவும் வழிவகுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சுங்க வரிகள் மற்றும் திறமையாளர்களின் இடம்பெயர்வு ஆகியவற்றை வாஷிங்டன் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த முனைவது, பெருகிவரும் பரிவர்த்தனை சார்ந்த அமெரிக்காவை நோக்கிய ஒரு கட்டமைப்பு மாற்றத்தைப் பிரதிபலித்தாலும், பாதுகாப்பு, உளவுத்துறை மற்றும் முன்னணித் தொழில்நுட்பங்களில் கடந்த இருபது ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள ஆழமான நிறுவனமயமாக்கல், இந்தியா-அமெரிக்கா கூட்டணியின் வியூக அமைப்பு எவ்வித மாற்றமுமின்றி அப்படியே நீடிப்பதையே உறுதி செய்கிறது. சீனாவைச் சமநிலைப்படுத்துதல் மற்றும் முக்கிய விநியோக வழிகளில் உள்ள அபாயங்களைக் குறைத்தல் ஆகிய கட்டாயங்களால் நிலைநிறுத்தப்பட்ட, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அவர்களின் கூட்டணி ஒரு நீடித்த சமநிலையையே உருவாக்குகிறது.

கனடாவும் இந்தியாவும் வர்த்தக ஒப்பந்தத்தைத் (CEPA) தாண்டி பாதுகாப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை நோக்கிச் செல்ல, அவர்கள் ஒரு வெற்றிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை. இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இந்தோ-பசிபிக் மற்றும் தொழில்நுட்பப் பகிர்வுக் கட்டமைப்பையும், அத்துடன் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட அமெரிக்க-கனடா கண்ட அளவிலான பாதுகாப்பு மற்றும் தொழில்துறை சூழலமைப்பையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒட்டாவாவுடனான ஆழமான ஈடுபாடு, இந்தியாவை பரந்த வட அமெரிக்கப் பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பில் திறம்பட இணைக்கிறது.

வாஷிங்டனின் சுங்கவரி விதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, சமீபத்தில் தனது அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் கடைசி நேரத்தில் முறிந்த நிலையில் உள்ள கனடாவிற்கு, இந்தியக் கூட்டாண்மை மிக முக்கியமான வியூக பல்வகைப்படுத்தலை வழங்குகிறது. உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மற்றும் ஜி7 முக்கிய கனிமங்கள் செயல் திட்டம் ஆகியவற்றிலிருந்து சற்று விலகி முக்கிய இருதரப்பு தளங்களில் ஒன்றையொன்று இணைப்பதன் மூலம் இரு நாடுகளும் இந்த மீள்திறனை வலுப்படுத்த முடியும். அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா அல்லாத வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் தனது இலக்கை ஒட்டாவா அடைந்தாலும் கூட, கனடாவின் பொருளாதாரம் பெருமளவில் அமெரிக்காவைச் சார்ந்தே இருக்கும் என்பது தான் உண்மை நிலை. வாஷிங்டனும் ஒட்டாவாவும் ஒரு புதிய வட அமெரிக்க சமநிலையை எட்டும்போது, இரு கூட்டாளிகளுடனும் நிறுவன ரீதியாக இணைந்திருக்கும் இந்தியா, வியூக மற்றும் வர்த்தக ரீதியான பலன்களைப் பெறும்.

ஒட்டாவாவுடன் தொழில்நுட்பம், திறமை மற்றும் வளங்களுக்கான வழித்தடங்களை உறுதிசெய்து, அதே நேரத்தில் வாஷிங்டனுடன் யதார்த்தமாகப் பேரம் பேசுவதன் மூலம், இந்தியா வட அமெரிக்காவின் இந்தச் சுழலை ஒரு நீடித்த பிராந்திய-பொருளாதார நன்மையாக மாற்ற முடியும்.

ஸ்நேஹா பகத், ஜே.என்.யு-வின் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின், அமெரிக்கா ஆய்வு மையத்தில் உதவிப் பேராசிரியராகவும், ராதிகா குப்தா, அதில் ஒரு ஆராய்ச்சி அறிஞராகவும் உள்ளனர்.



source https://tamil.indianexpress.com/opinion/how-india-can-turn-trade-disruptions-in-north-america-to-its-advantage-12686408