திங்கள், 6 ஜூலை, 2015

இந்திய வர்த்தகர்களிடம் மோசடி செய்யும் கும்பல்:


ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மூலம் இந்திய வர்த்தகர்களிடம் மோசடி செய்யும் கும்பலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம், எச்சரிக்கையாக இருக்கும்படி, அனைத்து தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கும், மத்திய அரசு தகவல் அனுப்பி உள்ளது.
கடந்த சில மாதங்களாக, தான்சானியா நாட்டில் இருந்து இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களுக்கு, முந்திரி உள்ளிட்ட உணவுப் பொருட்களை, சலுகையில் விலையில் மொத்தமாக விற்பதாக, இ - மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதற்கு பதில் அளித்தவர்களிடம் சாதுரியமாகப் பேசி, நம்ப வைத்து மோசடி செய்துள்ளனர். இந்திய ஏற்றுமதியாளர்களை நம்ப வைப்பதற்காக, ஆப்ரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண்கள், மற்றும் இளைஞர்களை, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில், மொபைல் போனில் பேச வைத்துஉள்ளனர்.நம்மவர்களோ, 'நம் தாய்மொழியில் பேசுகின்றனரே' என்று நம்பி, பெரும்தொகையை அனுப்பி ஏமாந்துள்ளனர். இதுகுறித்து, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தில்,
பாதிக்கப்பட்ட சில ஏற்றுமதியாளர்கள் புகார் செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த, தான்சானியாவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், மத்திய அரசுக்கு ஓர் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துஉள்ளனர்.
இந்திய மொழிகளில்...இதுகுறித்து, வர்த்தக அமைச்சக கட்டுப்பாட்டில் இயங்கும் வேளாண் விளைபொருள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:ஆப்ரிக்காவிலிருந்து, 'அக்ளிமேடைஸ் குரூப்' என்ற நிறுவனம், இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் நியமித்த இந்தியர்கள், ராகுல் பட்டேல், ஜேம்ஸ் மைனா, மித்தாலி ஷா, ஜூமா ஷபானி, சமீர் வியாஸ் ஆகிய பெயர்களில், தனித்தனியாக, இ - மெயில் மற்றும் மொபைல் போன்களில் தொடர்பு கொண்டு, இந்திய மொழிகளில் பேசி ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக, இந்திய துாதரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மோசடி இ - மெயில் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களையும் பட்டியலிட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஆப்ரிக்க நாடுகளின் துாதரங்களைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பிறகே, வர்த்தகத்தை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த சுற்றறிக்கை, நாட்டில் உள்ள அனைத்து தொழில் வர்த்த கூட்டமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன