மதரசாக்களை ரத்து செய்ய முடிவு:மகாராஷ்டிரா மாநில முஸ்லிம் மக்கள் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மதக் கல்வி மட்டும் கற்றுத் தரும் மதரஸாக்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மகாராஷ்டிர மாநில அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உருவ பொம்மையை எரித்து முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்வித் திட்டத்தில் முக்கிய பாடங்களான ஆங்கிலம், அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை கற்றுத் தராமல், மதக் கல்வியை மட்டும் கற்றுத் தரும் மதரஸாக்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மதரஸாக்களில் படிக்கும் மாணவர்கள், ‘பள்ளி செல்லா குழந்தைகள்’ என்றே கருதப்படுவார்கள் என்று 2 நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர அரசு அறிவித்தது. இதற்கு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மும்ரா பகுதியில் நேற்று அரசை கண்டித்து ஏராளமான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உருவ பொம்மையை எரித்து கோஷமிட்டனர். அரசின் முடிவை கண்டித்து அம்ருட் நகர் முஸ்லிம்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிராவில் 1990-க்கும் அதிகமான மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். மாநில அரசின் முடிவால் இந்த மதரஸாக்கள் தங்கள் அந்தஸ்து மற்றும் அரசின் சலுகைகளை இழந்துவிடும் என்று தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ அவாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதே கட்சியை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ ஜிதேந்திர அவடாத் கூறுகையில், ‘‘ஆர்எஸ்எஸ்ஸின் நிர்பந்தத்தால் பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது’’ என்று குற்றம் சாட்டினார்.