ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

கோடை விடுமுறை

 கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தொற்று காரணமாக, கடந்தாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதே போல் 10 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், இம்முறை கொரோனா பரவல் குறைந்ததால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை, தேர்வு தேதியும் வெளியிட்டுள்ளது.

வழக்கமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும். அதை தொடர்ந்து 10 ஆம் வகுப்புக்கும் பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறும். ஆனால், இம்முறை நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், மே இறுதி வரை தேர்வு நடைபெறுகிறது.

12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்புகளுக்கு மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரையிலும் நடக்க இருக்கிறது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை எத்தனை நாள்கள்?

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, முந்தைய ஆண்டுகளுக்குடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது.


source https://tamil.indianexpress.com/education-jobs/tn-school-education-department-announce-summer-vacation-for-school-students-434773/