புதன், 13 ஏப்ரல், 2022

ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை

13 4 2022 

மத்தியப் பிரதேசத்தில் கர்கோனின் காஸ்கஸ்வாடி பகுதியில் கடந்த 10 ஆம் தேதி ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு வீட்டை, ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரின் வீட்டுத் திட்டத்தின் அசல் பயனாளியாக இருந்த அவரது கணவர் இறந்ததைத் தொடர்ந்து, பிர்லா மார்க்கில் உள்ள வீடு ஹசீனா ஃபக்ரூவின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாக ஆதாரத்தையும் குடும்பத்தினர் காட்டுகின்றனர்.

ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்ட 12 வீடுகளில் இதுவும் ஒன்று. ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலைத் தொடர்ந்து, அங்கு நான்கு இடங்களில் 16 வீடுகள், 29 கடைகள் இடிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மனமுடைந்து பேசிய ஹசீனா(60), திங்கட்கிழமை காலை, நகராட்சி ஊழியர்கள் புல்டோசர்களுடன் வந்தனர். எங்களை வெளியே தள்ளிவிட்டு, ஆவாஸ் யோஜனாவின் கீழ் கட்டப்பட்ட வீடு என்று எழுதப்பட்டிருந்த சுவரில் மாட்டுச் சாணத்தைத் தேய்த்துவிட்டு, சில நிமிடங்களில் வீட்டை இடித்துவிட்டார்கள் என்றார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இப்பகுதியில் தங்கியிருப்பதாக கூலி வேலை செய்யும் அவரது மகன் அம்ஜத் கான் (35) தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, 2020 வரை, நாங்கள் குடிசை வீட்டில் வாழ்ந்தோம். 2020ல், யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்புதல் வந்தபிறகு, pucca வீட்டை கட்டி குடியேறினோம். வீடு கட்ட அரசு தரப்பில் 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நாங்கள் சேமித்து வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை போட்டு, வீட்டை கட்டி முடித்தோம்.

சொத்து வரி ரசீது, தாசில்தாரிடம் விண்ணப்பம், தகுதி உறுதிப் பத்திரம், பிரதமரின் வீட்டுத் திட்டத்தின் பயனாளியாக இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானின் கடிதம் ஆகியவை அம்ஜத் தாக்கல் செய்த ஆவணத்தில் அடங்கும்.

குடிசை வீட்டின் வெளியே ஹசீனா நிற்பது போலவும், பின்னர் புதிய வீட்டின் முன் நிற்கும் மற்றொரு புகைப்படமும் உள்ளது.

குடும்பத்தின் கூற்றுப்படி, மோதல்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 7 (வியாழன்) ஹசீனாவுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதில், மூன்று நாட்களுக்குள் உரிமையின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் வீட்டை இடித்துவிடுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.

நோட்டீஸுக்கு பதில் அனுப்ப தயார் செய்த கடித்தத்தை காட்டிய அம்ஜத், னது தந்தையின் இறப்புச் சான்றிதழ் முதல் சொத்து வரி ஆவணம் வரை அனைத்து ஆவணங்களுடன், வெள்ளிக்கிழமை மாவட்ட நீதிமன்றத்திற்கு பதில் தட்டச்சு செய்ய விரைந்தேன். ஆனால் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் போது அதை எப்படி சமர்ப்பிக்க முடியும்? திங்கட்கிழமை புல்டோசர்களுடன் வந்துவிட்டார்கள் என தெரிவித்தார்.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அனுகிரஹா, பயனாளிக்கு வேறு இடத்தில் வீடு கட்ட பணம் ஒதுக்கப்பட்டது, ஆனால் அவர் அதை ரூ.2 கோடி மதிப்பிலான அரசு நிலத்தில் கட்டியுள்ளார். அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்றியுள்ளோம்.

மோதலைத் தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் வீடு இடிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியதற்கு, கஸ்கஸ்வாடி முக்கிய கலவரப் பகுதிகளில் ஒன்றாகும், மீதமுள்ளவை குற்றப்பத்திரிக்கையில் உள்ளன என தெரிவித்தார்.

ஆனால் அம்ஜத் தரப்பில் கூறுகையில், நாங்கள் அந்த மனைக்கு தான் விண்ணப்பித்தோம். அதே மனைக்கு தான் வீடு ஒதுக்கப்பட்டது. வேறு ஏதேனும் நிலத்தில் வாழ வழி இருந்தால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் ஏன் எங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்ய போகிறோம் என தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, கார்கோனில் நடந்த வன்முறையில் குறைந்தது 10 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. எஸ்பி சித்தார்த் சவுத்ரி உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இரு தரப்பு புகார்களின் பேரில் குறைந்தது 27 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதல்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வசூலிக்க மாநில அரசு தனது முதல் உரிமைகோரல் தீர்ப்பாயத்தையும் நிறுவியுள்ளது.

ராம நவமி ஊர்வலத்தின் அமைப்பாளர் மனோஜ் ரகுவன்ஷியின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் முதல் ஊர்வலம் தலாப் சௌக்கில் உள்ள மசூதிக்கு சில மீட்டர்கள் முன்னால் போலீஸ் தடுப்புகளால் தடுக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், ஊர்வலம் முஸ்லிம் சமூகம் செல்லும் அதே பாதையில் செல்கிறது, எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த ஆண்டு அங்கு தடுப்பு வேலிகள் இருந்ததால், அந்த இடத்தில் பாஜக நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது” என்றார்.

கோட்வாலி காவல் நிலைய ஆய்வாளர் பி எல் மண்ட்லோய் கூறியதாவது, ஊர்வலத்தை மதியம் 2-3 மணிக்குள் புறப்பட அறிவுறுத்தப்பட்டது.ஆனால், அவர்கள் மாலை 5 மணி வரை தாமதமாக்கினர். அந்த நேரத்தில்தான் தலாப் சவுக் மசூதிக்கு வெளியே 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்.சிலர் கல் வீச தொடங்கியதால் நிலைமை மோசமடைந்தது என்றார். இந்த வன்முறையில் மாண்ட்லோய்க்கு தலையில் காயம் ஏற்பட்டது.

சஞ்சய் நகரில் இந்து மற்றும் முஸ்லீம் குடும்பங்களின் இருவரது வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/house-destroyed-built-under-pm-awas-yojana-in-mp-440140/

Related Posts: