திங்கள், 11 ஏப்ரல், 2022

அசைவ உணவு சாப்பிட்டதால் ஆத்திரம்… பல மாணவர்கள் படுகாயம்

 11 4 2022 

புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடதுசாரி அமைப்புகள் மற்றும் ஏபிவிபி அமைப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், பல மாணவர்கள் காயமடைந்தனர். காவேரி விடுதி மெஸ்ஸில் அசைவ உணவு சமைத்து பரிமாறப்படுவதை தடுக்கும் முயற்சியில் ஏபிவிபி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்க்கும் தெரிவிக்கும் வகையில், அதே விடுதியில் இடதுசாரி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நவமி பூஜைக்கு இடையூறு விளைவிக்க ஏபிவிபி அமைப்பினர் முயன்றதால், இரு பிரிவினரிடையே பதற்றம் ஏற்பட்டது.

இரவு 7.30 மணியளவில் வன்முறை வெடித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதேபோல், வன்முறையில் 6 மாணவர்கள் மட்டுமே காயமடைந்துள்ளதாக காவல் துறை தரப்பில் கூறிய நிலையில், மொத்தமாக காயமடைந்தோரின் எண்ணிக்கை 50 முதல் 60ஐ தாண்டும் என இடதுசாரி அமைப்பினரும், 15 முதல் 20 என ஏபிவிபி அமைப்பினரும் கூறுகின்றனர்.இதில் 8-10 உறுப்பினர்களும் உள்ளனர்.
வீடியோ ஆதாரங்களின்படி, ஒரு மாணவனின் நெற்றியிலிருந்து ரத்தம் தேய்ந்த நிலையில் இருப்பதையும், மற்றொருவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதையும் போன்ற காட்சிகளை காண முடிந்தது.


இடதுசாரி ஆர்வலர்களின் கூற்றுப்படி, ஏபிவிபி மாணவர்கள் விடுதியில் அசைவ உணவு சமைக்கப்படுவதைத் தடுக்க முயன்றதாகக் கூறப்பட்டது. JNU மாணவர் சங்கத்தின் (JNUSU) கவுன்சிலர் அனகா பிரதீப் கூறுகையில், “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அனைத்து விடுதிகளிலும் சைவம் மற்றும் அசைவ உணவுகள் சமைக்கப்படுகின்றன. இது வழக்கமான நடைமுறை தான். ஏபிவிபி மாணவர்கள் காவேரி விடுதி அருகே ஏதோ நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வியாபாரி கோழி விநியோகம் செய்ய வந்தபோது, அவரை தடுத்து நிறுத்தினர். ஹோமம் நடத்தப்படுவதாகவும், அசைவ உணவை சமைக்க முடியாது என கூறி வியாபாரியையும், மெஸ் செயலாளரையும் தாக்கியுள்ளனர்” என்றார்.

ஆனால், அசைவ உணவு பிரச்சினை இல்லை என்று ஏபிவிபி ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பேசிய ஏபிவிபி செயலாளர் உமேஷ் அஜ்மீரா, ஜேஎன்யுவின் பொது மாணவர்கள் காவேரி விடுதியில் ராம நவமி ஹவனம் நடத்திக் கொண்டிருந்தனர், ஆனால் இடதுசாரிகள் பிரச்சினை ஏற்படுத்த விரும்பினர். அது நடக்காமல் தடுக்கவும், மக்கள் சேருவதைத் தடுக்கவும் சலசலப்பை ஏற்படுத்தினர். அவர்களால் 3.30 மணிக்கு தொடங்கிவிருந்த ஹோமம், 5 மணிக்கு தான் தொடங்கியது. அசைவ உணவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இந்த சர்ச்சை அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. விடுதியில் ஒரே நேரத்தில் இப்தார் விருந்தும் ஹவானும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது என தெரிவித்தார்.

வன்முறை நிகழ்வதற்கு சற்று முன், இரவு 7 மணியளவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மாணவர்களின் டீன் சுதீர் பிரதாப் சிங்கிடம் பேசியபோது,என்ன சமைக்க வேண்டும் என்பதை மாணவர்களின் மெஸ் கமிட்டிகள் தீர்மானிக்கின்றன, இதில் நிர்வாகத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. முறையான புகார் எதுவும் இல்லை. ஆனால் எனக்கு அழைப்பு வந்ததும், வார்டனிடம் பேசினேன். சமைக்கட்டும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தோம். இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய காவேரி விடுதி மெஸ் வார்டன் கோபால் ராம், என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து வருகிறோம், மெனுவைத் தீர்மானிப்பதில் வார்டன்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. மெஸ் குழு அதைத் தீர்மானிக்கிறது. அது ஒரு நிலையான மெனு. அசைவ உணவை வழங்குவது தொடர்பாக ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்றார்.

இதற்கிடையில், சிறிது நேரத்தில் மாணவர்களிடையே வன்முறை வெடிக்க தொடங்கியது. மாலையில் கற்கள் மற்றும் பூந்தொட்டிகளை வீசத் தொடங்கியதாக இரு மாணவர் முகாம்களும் குற்றம் சாட்டின.

SFI செயற்பாட்டாளர் ஹரேந்திர சேஷாமா கூறுகையில், காயமடைந்தவர்களில் நானும் ஒருவன் தான். “இரவு 7:30 மணியளவில் இரவு உணவு பரிமாறப்பட்டபோதும் தான், வன்முறை வெடித்தது. கைகளில் லத்திகள், செங்கற்கள், துடப்பம் ஆகியவற்றுடன் வந்த ஏபிவிபி அமைப்பினர், அசைவ உணவு பரிமாறுவதை கண்டு, மாணவர்களை தாக்க தொடங்கினர். என்னை பலமுறை லத்தியால் அடித்தனர் என்றார்.

எம்ஏ சமூகவியல் மாணவியான அக்தரிஸ்தா அன்சாரி, நெற்றியில் காயம் ஏற்பட்டதையடுத்து, எய்ம்ஸ் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து பேசிய மற்றொரு மாணவர் ருத்ராக்ஷ் பைக்ரா , இரவு 8 மணியளவில் வன்முறை தொடங்கியது. ஏபிவிபி அமைப்பினர் வீசிய கற்களில் தான், என நெற்றியில் காயம் ஏற்பட்டது. மிகுந்த சலசலப்பு இருந்ததால், அவளைத் தாக்கியவரை சரியாகப் பார்க்க முடியவில்லை.உடனடியாக ஒரு ஆட்டோவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் என்றார்.

ஏபிவிபி தொண்டர்களும் காயமடைந்ததாக தெரிவித்தனர். ஏபிவிபி தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் யாதவ் கூறுகையில், இது திட்டமிடப்பட்ட சதியாகும். மாணவர்கள் அமைதியான பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதே நேரம், இப்தார் விருந்தும் நடந்தது. இருட்ட தொடங்கியதும், அவர்கள் வன்முறையில் ஈடுபட தொடங்கினர். எங்கள் அமைப்பினர் இணைச் செயலாளரின் விரலை உடைந்தனர். மற்றொரு செயல்பாட்டாளரின் தலையில் பூந்தொட்டியை போட்டு உடைத்தனர் என்றார்.

ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடியின் தொலைபேசி ஞாயிற்றுக்கிழமை இரவு அணைக்கப்பட்டிருந்தது.

டிசிபி தென்மேற்கு மனோஜ் சி கூறுகையில், “இரவு 9:45 மணியளவில் நிலைமை சீரானது. அந்த நேரத்தில் காவல் துறையினர் வளாகத்தில் இருந்தனர். இரு மாணவர் அமைப்பினரும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.புகார்களின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜேஎன்யு நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பிறகு நாங்கள் வளாகத்திற்குள் நுழைந்தோம்; காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை என்றார்.

ஜேஎன்யுவில் கடைசி பெரிய வன்முறை சம்பவம் ஜனவரி 5, 2020 அன்று நடந்தது. ஜனவரி 5 அன்று சுமார் 100 முகமூடி அணிந்த நபர்கள், வளாகத்திற்குள் நுழைந்து தடிகளை கொண்டு சுமார் 4 மணி நேரம் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அதில், இதில் 36 மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட JNUSU தலைவர் ஐஷே கோஷூம் காயமடைந்தனர்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், யாரும் கைது செய்யப்படவில்லை.

source https://tamil.indianexpress.com/india/jnu-students-injured-in-scuffle-over-non-veg-food-ram-navmi-pooja-438982/