1 4 2022
20 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த மனுவில், 2017 முதல் 2020 வரையிலான மூன்று நிதியாண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தை தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.
நிலுவையில் உள்ள 548 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தையும், 2,029 கோடி ரூபாய் செயல்பாட்டு மானியத்தையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத் தொகை 13,504 கோடி ரூபாய் உள்பட 20,860 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான காலக்கெடு நிறைவடைவதால், நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ள அவர், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
source https://news7tamil.live/chief-minister-of-tamil-nadu-urges-the-union-finance-minister-to-release-the-gst-arrears.html





