தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், பாப்புலர் ஃப்ரண்ட் அப் இந்தியா அமைப்பு (Popular Front of India) தடை செய்ய வேண்டும் என்று இந்தியாவில் சில இடங்களில் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொலைக்காட்சிகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக செய்திகள் வருகிறது. ஒருவேளை பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்பட்டால், பாஜக தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோர் 2, 3 மாதங்களுக்கு உங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள். தடை செய்யப்பட்டால் அந்த அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வெளிப்படலாம். எனவே, கோவை, கன்னியாகுமரி, வேலூர் போன்ற பகுதிகளில் தீவிரமாக இந்துத்துவ பேசும் நபர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியாக பயணம் செய்யாதீர்கள். ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று கூறியுள்ளதாக ஆடியோ வெளியானது.
இந்தநிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தரப்பில் சென்னை காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் அண்ணாமலை ஆடியோவில் பேசியதாக கூறப்படும் தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்ணாமலை மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும், அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/popular-front-of-india-complaint-against-bjp-leader-annamalai-442670/