இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அந்நாட்டில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விலைவாசி உயர்வு, மற்றும் எரிபொருள் தட்டுபாடு காரணமாக எதிர்கட்சிகள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு நாளை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் முகநூல், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வேலை செய்யவில்லை என தகவல் வெளியானது. இதை உறுதிபடுத்தும் விதமாக இலங்கை தொலைதொடர்புகள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சமூக வலைத்தளங்களின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
source
https://news7tamil.live/social-media-block-in-srilanka.html