சனி, 9 ஏப்ரல், 2022

சமூக நீதிக்கான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் பிறப்பிப்பது ஏன்?

 

9 4 2022 நீதிமன்றங்கள் வழங்கிய 3 தீர்ப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இதை திமுக தனது ஆட்சியின் ஹாட்ரிக் வெற்றியாக பார்க்கிறது. உண்மையில் அந்த தீர்ப்புகளின் பின்னணி என்ன?


சமூக நீதிக்கான திமுகவின் ஹாட்ரிக் வெற்றி:

இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காக முக்கிய வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பித்த மூன்று முக்கியமான தீர்ப்புகள் சமூக நீதிக்கான வெற்றியாகவும் வரலாறாகவும் மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், சமூக நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்துள்ள 3-வது வெற்றி. தமிழ்நாடு அரசு அல்லது திமுகவிற்கு ஹார்டிரிக் வெற்றியை கொடுத்த அந்த மூன்று தீர்ப்புகள்
1) அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
2) அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
3) நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

இந்த மூன்று தீர்ப்புகள் சமூக நீதியை தேசிய அளவில் உயர்த்தி உள்ளது. திமுக ஆட்சியில் சமூக நீதி ஆட்சிக்கான ஹாட்ரிக் வெற்றி என திமுக இந்த தீர்ப்புகளை பிரகடனப்படுத்துகிறது. குறிப்பாக, இந்த மூன்று வெற்றிகளும் தற்போது ஏன் கிடைத்துள்ளன என்பதில் தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு காரணம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.

சில தீர்ப்புகள் ஆளும் அரசு அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அனுசரனையாக இருக்கின்றன என்ற விமர்சனங்களும் எழுந்தன.  அதாவது, மகாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கப்பட்ட தீர்ப்பு. ஆந்திராவில் பட்டியலின மக்களுக்கான உள் ஒதுக்கீடு செல்லாது என்ற உத்தரவு. 50 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லாது என ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்ளிட்ட பல வழக்குகளின் தீர்ப்புகள் சமூக நீதிக்கு எதிரானவையாகவே பார்க்கப்பட்டன. தற்போது கூட, வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5% இடஒதுக்கீட்டில் மட்டும் மாற்றான தீர்ப்பு வந்துள்ளது. உரிய ஆதாரங்களையும் ஆவணங்களையும் சமர்பிக்காதது காரணமாக சொல்லப்பட்டுள்ளது. வன்னியர் சமூக மக்கள் எந்த அளவிற்கு பின் தங்கி உள்ளனர் என்பதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

ஆனாலும், இது போன்ற கடந்த கால வரலாற்றில் இருந்து 7.5% இட ஒதுக்கீடு, 27% இட ஒதுக்கீடு தீர்ப்பு, 10.5% இட ஒதுக்கீடு தீர்ப்பு ஆகிய மூன்று தீர்ப்புகளுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் பொருளாதார நிகழ்வுகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஜனரஞ்சக விருப்பங்களின் வெளிப்பாடு:

ஜனரஞ்சக விருப்பங்கள் அல்லது அபிலாஷைகளோடு அடையாளப்படுத்திக்கொள்ள கூடிய நிர்பந்தத்தில் சமூக அரசியல் பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நெருக்கடி நீதித்துறைக்குள்ளும் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த வழக்குகளின் தீர்ப்புகளுக்கான பின்னணியில் மக்களின் போராட்டங்களும் உரிமைகளும் உள்ளன. காலங்காலமாக மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் போது அது சமூக நெருக்கடியாக கொந்தளித்து இருப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. அதுபோன்ற சமூக நெருக்கடிகள் இந்த தீர்ப்புகள் கிடைக்க காரணமாக உள்ளதா என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டி உள்ளது.


புதிய சிந்தனை – புதிய உழைப்பு – புதிய உற்பத்தி:

நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்கள் இனி மருத்துவராவது கனவாக போய்விட்டது என்ற ஆதங்கம் தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. நீட் தேர்வால் மருத்துவர் கனவு பாதிக்கப்பட்டதால் அனிதா என்ற மாணவி உயிரிழந்தார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இதுவரை 16க்கும் மேற்பட்ட மாணவர்கள் மரணத்தின் மடியில் தங்கள் உயிரை ஒப்படைத்துள்ளனர். இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களும் நீட் தேர்வுக்காக இதுவரை பெரிய போராட்டங்களை முன்னெடுக்காத போது தமிழ்நாடு மிகக்கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து களமாடியது. தொடர்ந்து சட்ட ரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் போராட்டங்களும் நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்களும் தொடர்ந்துகொண்டே தான் உள்ளன.

கால காலமாக அடித்தட்டில் இருக்கும் மக்கள் அரசின் உயர் இடங்களில் தங்களுக்கான உரிமையை மீட்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதை இந்த இடத்தில் நாம் மீண்டும் கவனப்படுத்த வேண்டியுள்ளது. நீட் தேர்வால் தங்களின் உரிமை பாதிக்கப்படுவதாக அதிமுக, திமுக அரசுகளின் போராட்டங்களையும் அதனையொட்டி கிடைக்கப்பெறும் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டையும் ஒப்பீட்டு பார்க்கலாம்.
ஏற்கனவே, காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்படுபவர்களும் காலங்காலமாக வாய்ப்புகளைப் பெறுபவர்களும் எதிரெதிர் துருவமாக இருக்கின்றனர்.

விளிம்பு நிலையில் இருந்து வருபவர்களுடன் ஒப்பிடும் போது காலங்காலமாக வாய்ப்புகளை பெறுபவர்கள் புதிய சிந்தனை, புதிய கண்டுபிடிப்பு, புதிய கற்பனைத் திறன், புதிய படைப்பாக்கத்தில் ஈடுபடுவதில் சுணக்கமாக உள்ளனர். அவர்களிடம் கற்பனை, ரசனை, புதுமை, உற்பத்தி முறை இருக்காது. தனக்கு புதிதாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களிடம் புதிய கற்பனை இருக்கும். உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் செயல் அதிகாரியாக நியமித்துள்ள பலர் இந்த பின்னணியில் இருந்து வருவதைப் பார்க்கலாம். கூகுள் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சையும் பல துறைகளின் முன்னணி தலைவர்கள் பலரையும் இந்த இடத்தில் ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். சர்வதேச ஆளும் வர்க்கத்திற்கு கீழ்த்தட்டிலிருந்து வருபவர்களிடம் புதுமை, ஆற்றல், கற்பனைத் திறன், படைப்பாக்கம் இவை எல்லாம் தேவைப்படுகிறது. புதிய உழைப்பும் சிந்தனையும் தேவைப்படுவதால் அதனை பயன்படுத்திக்கொள்ளும் அவசியம் உருவாகுகிறது. இதுவும் சமூக நீதிக்கான தீர்ப்புகள் கிடைக்க உதவிகரமாக இருப்பதைக் காணலாம்.


நீதி துறை – மத்திய அரசு முரண்பாடு:

நீட் தேர்வு முறையை தீர்க்கமாக பாஜக அரசு ஆதரிப்பதாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடை நோக்கி செல்லவும், நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கும் நெருக்கடிக்குள் தள்ளியது. அதாவது, ஒரே நாடு ஒரே தேர்வை பாஜக ஆதரிக்கிறது. இதற்காக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மாநிலங்களின் உரிமைக்கு எதிராக மத்திய அரசு நிற்கிறது. நீதிமன்றங்களின் படிகட்டு ஏறி மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு வாதிடுகிறது. இது, நீதிதுறைக்கும் மத்திய அரசிற்கும் இடையே உள்ள முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது. நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடுகளை இந்த தீர்ப்புகள் மூலம் நிரூபணம். ஒருபக்கம் நீட் போராட்டம் இன்னொரு பக்கம் நீட் முறைக்குள் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை உள்ளடக்குவதற்கான முயற்சிகள், அதன் காரணமாகவே இந்த ஒதுக்கீடுகள் 7.5% மற்றும் 27% கொண்டு வரப்பட்டன. அந்த புள்ளியில் தான் முந்தைய அதிமுக அரசு 7.5% பார்மூலாவைக் கொண்டு வந்தது.


திமுகவின் சட்டப்போராட்டமும் சமூக நெருக்கடியும்:

இந்த பின்னணியில் இருந்து நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளை அணுகினால் அதில் சமூக – பொருளாதார நெருக்கடிகளின் தன்மைகளை புரிந்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் திமுக அரசு மேற்கொண்ட சட்ட போராட்டத்தையோ மக்கள் திரட்டி நடத்திய போராட்டத்தையோ எளிதில் புறம் தள்ளிவிட முடியாது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பு மற்றும் மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீட்டில் முதுகலை மருத்துவத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்காக 27% இட ஒதுக்கீடு, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு ஆகிய இந்த மூன்று தீர்ப்புகளுக்கு பின்னணியில் திமுகவின் தெளிவான சட்டப்போராட்டம் இருப்பதை புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில், சமூக நெருக்கடியையும், பொருளாதார நெருக்கடியையும், அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறையின் வரலாற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு பார்க்கவும் முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில், கூறியபடி, 2020-2021 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5% ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதற்கு காரணம், இந்திய சமூகம் எதிர்கொண்டுள்ள பொருளாதார ஒடுக்கு முறை, பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடி நிலையால், இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் கவனத்தில் கொள்ளப்பட கூடிய ஒன்றாக மாறுகிறது. நாடாளுமன்றத்தின் மூலம் பெறப்பட்ட சட்டங்கள் என்பது போய் தற்போது நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாகவே இத்தகைய சட்டங்களை திமுக அரசு பாதுகாத்ததோடு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக செயல்படுகிறது.

இந்திய மாநில மக்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளையும் சமூக ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளையும் முதன்மையாக வைத்து இந்த 3 தீர்ப்புகளை கவனிப்பது இன்றியமையாதது. அதே சமயத்தில், சாதி அல்லது வர்க்க ரீதியாக தடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் பாதுகாப்பு கேடயம் என்பதை சமூக நீதி தளத்தில் பறைசாற்றலாம்.

source https://news7tamil.live/the-court-judgments-and-social-justice.html