ஞாயிறு, 21 ஜூலை, 2024

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ரயில் விபத்து -12பெட்டிகள் தடம்புரண்டன!

 

உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயிலியின் 12பெட்டிகள் அம்ரோஹா அருகே தடம்புரண்டு விபத்திக்குள்ளானது. 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து  டெல்லிக்கு சனிக்கிழமை (ஜுன் 20) அன்று சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே சென்றபோது  திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு தண்டாவளத்தில் இருந்து சரிந்தன.  அருகே பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த ரயில்வே அதிகாரிகள்  மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில்  டெல்லி-லக்னோ இடையிலான ரயில் பாதை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ரயிலின் பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் மட்டுமே வேதிப் பொருட்களை ஏற்றிச் சென்றதாகவும் மீதமுள்ள பெட்டிகள் காலியாக இருந்ததாகவும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன்பாக உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகர் திப்ரூகர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு சரிந்தன. இந்த விபத்தில் நான்கு பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி  ” தொடர்ச்சியாக மோடி தலைமையிலான ஆட்சியில் சில நாட்களுக்கு ஒருமுறைதான் ரயில் விபத்துகள் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அது போன்ற செய்திகள் தினமும் வந்துகொண்டே இருக்கின்றன. மத்திய அரசின் அலட்சியத்தால், நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் ரயில்வே சீரழிந்துள்ளது.” என குற்றம் சாட்டியுள்ளது.

source https://news7tamil.live/another-train-accident-in-uttar-pradesh-12-coaches-derailed.html