பி.எம் ஸ்ரீ (PM SHRI) திட்டத்தை செயல்படுத்த மறுத்த எதிர்க்கட்சிகள் ஆளும் மூன்று மாநிலங்களில் பள்ளிக் கல்விக்கான குடை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. மேற்கு வங்காளம், பஞ்சாப் மற்றும் டெல்லியில் நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ள சமக்ரா சிக்ஷா திட்டம், இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் (RTE) 2009ஐ செயல்படுத்துவதை ஆதரிக்கிறது.
2023-24 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளுக்கான சமக்ரா சிக்ஷா நிதிகள், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்திற்கு முறையே ரூ.330 கோடி, ரூ.515 கோடி, ரூ.1,000 கோடி என இருந்த நிலையில், 2024-25ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதிகள் வெளியிடப்படவில்லை.
கல்வி அமைச்சகம் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் PM SHRI (PM Schools for Rising India) திட்டத்தை செயல்படுத்தாமல் மாநிலங்கள் சமக்ரா சிக்ஷா நிதியைப் பெற முடியாது என்று ஒரு மூத்த அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்
பி.எம் ஸ்ரீ திட்டம்
2022 இல் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், 14,500 பள்ளிகளை தேசியக் கல்விக் கொள்கையை (NEP) 2020 "வெளிப்படுத்த" மற்றும் அவர்களின் பிராந்தியத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு "முன்மாதிரியாக" இருக்க வைக்க முயல்கிறது. மத்திய அரசு மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் நடத்தப்படும் தற்போதைய தொடக்க, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான திட்டம் இந்த பி.எம் ஸ்ரீ திட்டமாகும்.
பி.எம் ஸ்ரீ டாஷ்போர்டில் தற்போது 10,077 பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் 839 கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் 599 நவோதயா வித்யாலயாக்கள், இவை இரண்டும் மத்திய அரசால் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள 8,639 பள்ளிகள் மாநில அல்லது உள்ளூர் அரசாங்கங்களால் நடத்தப்படுகின்றன.
2026-27 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.27,360 கோடி திட்ட மதிப்பீட்டை மத்திய அரசு அறிவித்து, அதில் ரூ.18,128 கோடியை மத்திய அரசு ஏற்கும். ஐந்தாண்டு காலத்தின் முடிவில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) "இந்தப் பள்ளிகளால் அடையப்பட்ட அளவுகோல்களைத் தொடர்ந்து பராமரிக்க" வேண்டும்.
2023-24 ஆம் ஆண்டிற்கு, 6,207 பி.எம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ரூ.3,395.16 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2,520.46 கோடி என்றும், மாநிலங்களின் பங்கு ரூ.874.70 கோடி என்றும் பிப்ரவரியில் அரசாங்கம் மக்களவையில் தெரிவித்தது.
பள்ளிகளின் தேர்வு
உத்தர பிரதேசத்தில் அதிக பி.எம் ஸ்ரீ பள்ளிகள் (1,865) உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (910) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (900) உள்ளன. பா.ஜ.க அல்லாத மாநிலங்களான பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பீகார் மற்றும் கடந்த மாதம் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த ஒடிசா ஆகிய மாநிலங்களில் எந்த மாநில அல்லது உள்ளூர் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. .
பி.எம் ஸ்ரீ பள்ளிகள் "சவால் முறை" மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன - சில குறைந்தபட்ச அளவுகோல்களை சந்திக்கும் பள்ளிகள் (நல்ல நிலையில் உள்ள கான்கிரீட் கட்டிடம், தடையற்ற அணுகல் பாதைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு தலா ஒரு கழிப்பறை உட்பட) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பள்ளிகள் உள்கட்டமைப்பு, கற்பித்தல் பணியாளர்கள் மற்றும் கற்றல் விளைவுகளை உள்ளடக்கிய அளவுருக்களின் தொகுப்பில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள் குறைந்தபட்சம் 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; கிராமப்புறங்களில் உள்ளப் பள்ளிகள் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாநிலங்கள் பரிந்துரைக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியலை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும், மேலும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு செயலாளரின் தலைமையில் ஒரு நிபுணர் குழு இறுதிப் பட்டியலை உருவாக்குகிறது. ஒரு தொகுதி / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு இரண்டு பள்ளிகள் வரை, அதாவது ஒரு தொடக்கப் பள்ளி மற்றும் ஒரு நடுநிலை / மேல்நிலைப் பள்ளி தேர்ந்தெடுக்கப்படலாம்.
மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது கேந்திரிய வித்யாலயா சங்கதன்/ நவோதயா வித்யாலயா சமிதி ஆகியவை கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளியின் பெயருக்கு முன்னால் பி.எம் ஸ்ரீ என்ற முன்னொட்டு இருக்க வேண்டும்.
நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து தரங்களிலும் பூஜ்ஜிய இடைநிற்றல் விகிதத்தை உறுதி செய்ய மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் உழைக்க வேண்டும், மாணவர்-ஆசிரியர் விகிதத்திற்கான விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் செயல்பாடு அடிப்படையிலான, விளையாட்டு அடிப்படையிலான, கலை சார்ந்த, மற்றும் பொம்மை அடிப்படையிலான கற்றல் போன்ற "புதுமையான கற்பித்தல்" முறைகளை செயல்படுத்த வேண்டும்.
சமக்ர சிக்ஷா
பி.எம் ஸ்ரீ திட்டம், சமக்ரா சிக்ஷாவிற்கு தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பின் மூலம் மாநில/யூனியன் பிரதேச அளவில் செயல்படுத்தப்பட உள்ளது, இது "பள்ளிக் கல்வித் துறைக்கான... முன்பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை... பள்ளிக் கல்விக்கான சம வாய்ப்புகள் மற்றும் சமமான கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அளவிடப்படும் பள்ளி செயல்திறனை மேம்படுத்துவதற்கான பரந்த குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.
2018-19 மத்திய பட்ஜெட் மூலம் முன்மொழியப்பட்ட சமக்ரா சிக்ஷா, முந்தைய சர்வ சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ), ராஷ்ட்ரிய மத்தியமிக் ஷிக்ஷா அபியான் (ஆர்.எம்.எஸ்.ஏ) மற்றும் ஆசிரியர் கல்வி (டி.இ) ஆகிய திட்டங்களை உள்ளடக்கியது.
11 வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களைத் தவிர்த்து, மத்திய மற்றும் மாநிலங்களால் 60:40 விகிதத்தில் இத்திட்டம் நிதியளிக்கப்படுகிறது, வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களில் செலவில் 10% மட்டும் ஏற்றால் போதும்.
திட்டத்தை ஏற்காத 3 மாநிலங்கள்
டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகியவை பி.எம் ஸ்ரீ திட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டன, ஏனெனில் இந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கங்கள் ஏற்கனவே "ஸ்கூல்ஸ் ஆஃப் ஸ்பெஷலைஸ்டு எக்ஸலன்ஸ்" மற்றும் "ஸ்கூல்ஸ் ஆஃப் எமினன்ஸ்" எனப்படும் முன்மாதிரியான பள்ளிகளுக்கு இதே போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேற்கு வங்கம் பள்ளிகளின் பெயர்களுக்கு பி.எம் ஸ்ரீ என்ற முன்னொட்டு தேவைப்படுவதை எதிர்த்துள்ளது, குறிப்பாக மாநிலம் 40% செலவை ஏற்கும் நிலையில், பி.எம் ஸ்ரீ என்று பெயரிட மறுத்துள்ளது.
பி.எம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மாநிலங்கள் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறவில்லை. ஆரம்பத்தில் நிறுத்தி வைத்த பிறகு, கேரளா, பீகார், தமிழ்நாடு மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் திட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டன.
source https://tamil.indianexpress.com/explained/what-is-pm-shri-the-showcase-schools-scheme-that-centre-is-pushing-in-states-6237426