கனமழையால் கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. தொடர் மழை, மோசமான வானிலையால் அங்கு மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே உள்ள மலைப்பகுதிகளில் இன்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மலப்புரம், நீலம்பூர் வழியில் செல்லும் சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, முண்டக்காய் பகுதியில் பல வீடுகள், கடைகள், வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன.
மேலும், பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செல்லும் பாலம் இடிந்து அடித்து செல்லப்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பேரிடர் ஏற்பட்ட இடத்தில் தற்காலிக பாலம் கட்டவும், ஹெலிகாப்டர் மூலம் மக்களை வெளியேற்றவும், தேவையான ஏற்பாடுகளை செய்யவும் ராணுவத்தின் உதவி கோரப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசு நிவாரணம்
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்தார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்ணூரில் இருந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்வதற்காக ராணுவ வீரர்கள் குழு ஒன்று புறப்பட்டு சென்றது.
மக்களவையில் ராகுல் பேச்சு
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
“வயநாடு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவுகள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட கூடிய பகுதிகளை கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ராகுல் வயநாடு பயணம்
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர்கள் நாளை (ஜூலை 31) பார்வையிட உள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேரள எம்.பிக்கள் கேசி வேணுகோபால், இடி முகமது பஷீர், எம்.கே ராகவன் ஆகியோர் நாளை காலை வயநாடு செல்கின்றனர்.
வயநாடு நிலச்சரிவில்.நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. சூரல்மலா கிராமத்தில் உள்ள 200 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் தகவல். முண்டக்கை டவுன் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அட்டமலை கிராமத்தில், சாலியாற்றில் சடலங்கள் மிதந்து வருவதாக கிராம மக்கள் தகவல். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து சென்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் வயநாடு பகுதியில் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டு கோழிக்கோட்டில் தரையறுக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாக மீட்பு பணியினர் குழுவினர் வயநாட்டிற்கு பயணம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கர்நாடகா மாநில முதல்வர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு உதவி புரிவதாக அறிவித்துள்ளனர்.
2 தமிழர்கள் உயிரிழப்பு
கேரளாவில் கட்டட வேலைக்கு சென்ற தமிழகத்தின் கூடலூர், புளியம்பாறையை சேர்ந்த காளிதாஸ் என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பினராயி விஜயன் பேட்டி
"வயநாடு நிலச்சரிவு சம்பவம் நம் நாடு இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு. நேற்று மிகக் கடுமையான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 2 மணிக்கும், 4.10 மணிக்கும் என 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 93 பேரின் உடல்களை மீட்டுள்ளோம் இதன் எண்ணிக்கை மாறலாம்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு 128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு தூங்கச் சென்ற பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் பலரின் உடல்கள் நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது. வயநாட்டில் 45 முகாம்களிலும், மாநிலம் முழுவதும் 118 முகாம்களிலும் 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படை, என்.டி.ஆர்.எப்., போலீசார் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ராணுவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பிரிவுகள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்று, நாம் நமது ஆதரவை நல்க வேண்டிய நேரம்." கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/heavy-rainfall-kerala-wayanad-landslide-updates-6711497