ஞாயிறு, 21 ஜூலை, 2024

தமிழ்நாட்டில் 6 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம்:

 

Police DGpa

தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பணியாற்றும் 9 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் பலியான சம்பவம் அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், கடலூர், சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை எகிற வைத்தன. தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்தது. 

கொலை குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழக காவல்துறையில் பல்வேறு மட்டங்களிலும் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். 

அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டில் ஏஎஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பிறப்பித்துள்ளார். முசிறி டிஎஸ்பி யாஸ்மின், தமிழ்நாடு காவல் அகாடமி துணை கண்காணிப்பாளராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இவர் பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கரின் காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் காவலர்களை மிக மிக மோசமாக சித்தரித்துள்ள சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் புகார் கொடுத்து வழக்கை முறைப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரல்லாது தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊமச்சிக்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக பாலசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் மணிமங்கலம் சரக உதவி காவல் ஆணையராக இளஞ்செழியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக ராஜபாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/9-police-dsp-officers-transferred-other-distract-update-in-tamil-6502062