திங்கள், 29 ஜூலை, 2024

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது – மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி திரிணாமூல் காங்கிரஸ் எம்பி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களையில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்தனர். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மௌசம் நூர் சார்பில்  தனிநபர் மசோதா மாநிலங்களவையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பணியாளர்களின் உரிமைகள் – செயற்கை நுண்ணறிவு 2023 மசோதா என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணியாளர்களை பாகுபடுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் AI தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் முடிவோ அல்லது வழங்கப்படும் பணியோ தங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருந்தால் அதை நிராகரிக்கும் உரிமையை பணியாளர்களுக்கு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஐ. தொழில்நுட்பம் அமலாகும் முன்பே அதுகுறித்த முழு தகவல்களையும் பணியாளர்களிடம் எடுத்துக் கூறி அவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து நிறுவனங்கள் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/employees-rights-should-not-be-affected-by-artificial-intelligence-technology-bill-tabled-in-rajya-sabha.html