வெள்ளி, 26 ஜூலை, 2024

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலுனுடன் UAE அமைச்சர் சந்திப்பு!

 

தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், UAE வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி ஆலோசனை மேற்கொண்டார்.

ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல்மரி அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்வற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று (ஜூலை 25) வருகை புரிந்த அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அப்துல்லா பின் தௌக் அல்மரியிடம் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இச்சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வளர்ச்சித் துறை ஆணையரும், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர்  வே.விஷ்ணு,  ஐக்கிய அமீரக தூதரகத்தின் உயர் அலுவலர்கள், பன்னாட்டு தொழில் குழுமத்தின் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக அப்துல்லா பின் தௌக் அல்மரி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நேற்று (ஜூலை 24) காலை பெசன்ட் நகரில் உள்ள ஹேல்த் வாக் (8 கிமி) நடைபயிற்சி பாதையில் நடை மற்றும் ஓட்டப் பயிற்சியினை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/new-business-investment-in-tamil-nadu-chief-minister-mk-stalloon-consults-with-uae-minister.html