இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு உயிரிழப்புகள்! வெளியான அதிர்ச்சித் தகவல்! 20 07 2024
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் உகான் நகரில் இருந்து முதன் முதலாக கொரோனா எனும் பெருந்தொற்று நோய் உலக நாடுகளுக்கு பரவியது. கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் பரவ தொடங்கிய இந்த தொற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமுடக்கம், மருத்துவமனையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளிகள் என எங்கு பார்த்தாலும் சுகாதார நெருக்கடி சூழலே ஏற்பட்டது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் காரணமாக இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்தியாவிலும் கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் மறையத் தொடங்கியுள்ள சூழலில், தற்போது கொரோனா உயிரிழப்புகள் குறித்த அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
அந்த ஆய்வு அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 11.9 லட்சம் உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது, அரசு அறிவித்த எண்ணிக்கையை விட உயிரிழப்புகள் 8 மடங்கு அதிகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் ஏற்க கூடியது இல்லை எனவும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு ஆய்வறிக்கையை மறுத்துள்ளது.
இந்த முடிவுகளை வெளியிட்ட நியூயார்க்கை சேர்ந்த ஆய்வுக் குழு, அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் முதல் முறையாக வயது, பாலினம், சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை அடிப்படையில் கொரோனா பாதிப்பால் எந்த அளவு இவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வுகளை செய்துள்ளனர். அப்போது, பெண்களும், விளிம்பு நிலை மக்களின் ஆயுட் காலம் அதிக அளவு சரிந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.
ஆயுட் காலம் சரிவு:
2020-ம் ஆண்டு இந்தியாவில் கூடுதலாக 11.9 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஆதிவாசிகள், தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மக்களே கொரோனா நேரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஆயுட் காலம் 5.4 ஆண்டுகள் வரை குறைந்து இருப்பதாகவும், பழங்குடியினர்களின் ஆயுட்காலம் 4.1 ஆண்டுகள் வரை குறைந்து இருப்பதாகவும், எஸ்.சி பிரிவினரின் ஆயுட்காலம் 2.7 ஆண்டுகள் வரை குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உயர் சாதி இந்துக்கள், ஒபிசி பிரிவினர் ஆகியோரின் ஆயுட்காலம் 1.3 ஆண்டுகள் சரிந்து உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், அதிக வருமானம் பெறும் நாடுகளை விட இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் ஆயுட்காலம் என்பது பெரிய அளவில் சரிந்து இருப்பதாக ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான சங்கிதா வியாஸ் கூறியுள்ளார்.
எனினும், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வினோத் பவுல் இது தொடர்பாக கூறுகையில், “இந்த ஆய்வில் பல குளறுபடிகள் உள்ளன. எனவேதான் ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். மேலும், இந்தியாவின் சிவில் பதிவேடு அமைப்பில் (CRS)ல் 99% உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியாவில் 2019-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2020 ல் 4.74 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே 11.99 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.
source https://news7tamil.live/8-times-more-deaths-than-reported-due-to-corona-in-india-shocking-study.html