கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒவ்வொரு மாதமும் அன்ன பாக்யா திட்டத்த்தின் கீழ் 10 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டம் ஷாஹாபூரில் உள்ள அரசுக் கிடங்கில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 6,077 குவிண்டால் அரிசி திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், அன்ன பாக்யா திட்டத்துக்கான அரிசி திருடப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் மணிகாந்த் ரத்தோட் நேற்று புதன்கிழமை போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அவருக்கு வழங்கப்பட்ட பல நோட்டீஸ்களுக்கு மணிகாந்த் ரத்தோட் பதிலளிக்கவில்லை என்று கூறினார்.
யார் இந்த மணிகாந்த் ரத்தோட்?
கலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. செயல்பாட்டாளரான மணிகாந்த் ரத்தோட், 2023 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். தேர்தலில் ரத்தோடை தோற்கடித்த பிரியங்க், தற்போது சித்தராமையா அமைச்சரவையில் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக உள்ளார்.
மே 2023 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை "கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதாக" காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தார் மணிகாந்த் ரத்தோட்.
அந்த நேரத்தில், கர்நாடகாவுக்குப் பொறுப்பான ஏ.ஐ.சி.சி பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மணிகாந்த் ரத்தோட் மற்றும் உள்ளூர் பா.ஜ.க தலைவர் ஒருவருக்கு இடையே நடந்த உரையாடலின் ஆடியோ கிளிப்பை வெளியிட்டார். அதில், கார்கே மனைவி மற்றும் குழந்தைகளை "தீர்த்துக் காட்டுவேன்" என்று ரத்தோட் கூறினார்.
காங்கிரஸின் குற்றச்சாட்டை "ஆதாரமற்றது" மற்றும் "பொய்" என்று நிராகரித்த ரத்தோட், ஆடியோ கிளிப்பை "போலி" என்று குறிப்பிட்டார். 27 வயதான ரத்தோட், மல்லிகார்ஜுன் கார்கேவின் கோட்டையாக இருந்த குர்மித்கல் பகுதியைச் சேர்ந்தவர்.
கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல வழக்குகள் மணிகாந்த் ரத்தோட்மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 40 கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மூன்று வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இதுவரை ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். மீதமுள்ள வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தண்டிக்கப்பட்ட மூன்று வழக்குகளில், அவர் 2013 ஆம் ஆண்டில், அவசர மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி பொது மக்களுக்கு ஆபத்தை விளைவித்தாக அவர் மீது வழக்குப் செய்யப்பட்டது. அதில் அவர் ரூ.2,400 அபராதம் செலுத்தினார். 2015 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கு அரசு வழங்க வேண்டிய பால் பவுடரைத் திருடியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2015ல், அரசு அதிகாரிக்கு தவறான தகவல் கொடுத்ததற்காக, 2,000 ரூபாய் அபராதம் செலுத்தி இருந்தார்.
நவம்பர் 2022 இல், பிரியங்க் கார்கேவை கொலை செய்யப் போவதாக ரத்தோட் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் மீது கலபுர்கியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், மணிகாந்த் ரத்தோட் தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.11.34 கோடி என்றும், ரூ.17.83 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகள் என்றும், ரூ.15.33 கோடி கடனாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார். அவரது அசையா சொத்துகளில் ஐதராபாத், கலபுர்கி மற்றும் மகாராஷ்டிராவின் தானே ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்கள், அரிசி ஆலை மற்றும் குடியிருப்புகள் ஆகியவை அடங்கும்.
source https://tamil.indianexpress.com/india/karnataka-bjp-leader-arrested-in-anna-bhagya-rice-theft-case-who-is-manikanth-rathod-tamil-news-6238001