திங்கள், 29 ஜூலை, 2024

உயர்கிறதா சர்க்கரை விலை? மத்திய உணவுத் துறைச் செயலர் வெளியிட்ட முக்கிய தகவல்!

 

சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்ய உள்ளதாக மத்திய உணவுத் துறைச் செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.

கடந்த 2019 முதல் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை கிலோவுக்கு ரூ.31-ஆக இருந்து வருகிறது.தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.42-ஆக உயர்த்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் மத்திய உணவுத் துறைச் செயலர் பங்கேற்றார். இதையடுத்து,  அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

“சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த விஷயத்தில் நாங்கள் ஓரிரு நாள்களில் முடிவு செய்வோம்.2024-25-ஆம் ஆண்டு பருவத்துக்கான (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57 லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவு 58 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது”

இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

source https://news7tamil.live/centre-govt-to-decide-soon-on-increasing-minimum-selling-price-of-sugar-union-food-secretary-sanjeev-chopra-interview.html

Related Posts: