வியாழன், 18 ஜூலை, 2024

தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!

 

தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வெப்பநிலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாகவே பெய்து வருகிறது. மே மாதம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், சேலம், கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, நீலகிரி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.

17 7 2024

முன்னதாக, கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது எனவே தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு என்பது தீவிரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் நன்னீரில் வாழும் தன்மை கொண்டது. பரவலாக மழை பெய்து வருவதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கும். அதன் மூலம் ஏடிஸ் வகை கொசு அதிகரிக்கிறது. அதனால், ஏடிஸ் கொசுவை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வரும் சூழலில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது.


குறிப்பாக கடந்த 10ம் தேதி 86 பேர் , 11ம் தேதி 83 பேர், 12ம் தேதி 106 பேர் , 13ம் தேதி 71 பேர் , 14ம் தேதி 71 பேர், 15ம் தேதி 37 பேர், 16ம் தேதி 114 பேர் என மொத்தம் 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 16ம் தேதி வரை 5976 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 2 நபர்கள் மட்டுமே இறந்துள்ளனர். இந்த டெங்கு பரவலை தடுக்க பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், தண்ணீர் தொட்டிகள், தண்ணீரை சேமித்து வைக்கும் இடங்களை பாதுபாப்பாக மூடி வைக்கவும், மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கவும், அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


source https://news7tamil.live/public-health-department-568-people-infecteddengue-tamil-naduhealth.html