பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி முதல்வர்கள் பங்கேற்கவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்று இருந்தார்.
மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடம் கூட பேச வாய்ப்பளிக்கவில்லை என்றும், மேற்கு வங்கத்திற்கு நிதி வேண்டும் என பேசிய போது மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
“நான் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியே வந்தேன். சந்திரபாபு நாயுடுவுக்கு 20 நிமிடங்களும், அசாம், கோவா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் 10-12 நிமிடங்களும் பேசினர். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நான் பேசுவதை நிறுத்தினர்.
தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி, கர்நாடகாவின் சித்தராமையா, இமாச்சலப் பிரதேசத்தின் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட குறைந்தது 4 இந்திய கூட்டணி முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிதி ஆயோக் கூட்டம்
இந்த நிதி ஆயோக் கூட்டம், பல்வேறு வளர்ச்சிப் பிரச்சனைகள் மற்றும் கொள்கை விஷயங்களைத் தீர்ப்பதன் மூலம் "2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது" என்பதில் கவனம் செலுத்துகிறது. இதன் நிர்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/mamata-banerjee-walks-out-of-niti-aayog-meet-tamil-news-6706122