புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்வில் செம்பினால் ஆன ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வானது கடந்த 18ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் காணொலி காட்சி
வாயிலாக துவங்கி வைக்கப்பட்டது. கோட்டையின் மையப்பகுதியல் உள்ள அரண்மனை
திடலுக்கு தெற்கே அமைக்கப்பட்டுள்ள 6 புதிய அகழாய்வு குழிகளில் B21 எனும்
குழியில் செங்கல் தளம் ஒன்று வெளிப்பட்டது.
தென்கிழக்கு மூலையில் வெளிப்பட்ட இந்த செங்கல் தளம் 280 செ.மீ நீளம் மற்றும் 218 செ.மீ அகலம் கொண்டுள்ளது. இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கிய 26 நாட்களுக்கு உள்ளாகவே 424 க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளது. இவை கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், இரும்பு பொருட்கள் மற்றும் செப்புப் பொருட்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வானது தொடங்கி 26 நாட்களாக
நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 20) A 22 என்ற அகழாய்வு குழியில் 5
செம்பினால் ஆன ஆணிகள் கிடைத்துள்ளது. இதுபோல C 20 என்ற அகழாய்வு குழியிலும்
செம்பினால் ஆன ஆணி ஒன்று கிடைத்துள்ளது.
இதன் எடை 2 கிராம் நீளம் 2.3 செ.மீ மற்றும் அகலம் 1.2 செ.மீ. இதுவரை இரும்பினால் ஆன ஆணிகளே கிடைத்து வந்த நிலையில் தற்போது செம்பினால் ஆன ஆணிகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக G27 எனும் அகழாய்வுக் குழியில் செம்பினால் ஆன 3செ.மீ நீளமுள்ள அஞ்சனக்கோல் (மைத்தீட்டும் குச்சி) ஒன்றும் கிடைத்திருந்தது. தற்போது பெற்பனைக்கோட்டை அகழாய்வில் தொடர்ந்து செம்பினால் ஆன பொருட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
source https://news7tamil.live/copper-nails-have-been-found-in-the-second-phase-of-excavation-at-polpanaikottai-near-pudukottai.html