ஞாயிறு, 28 ஜூலை, 2024

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

 

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை தான் புறக்கணித்ததற்கான காரணம் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த காணொலியில் பேசிய அவர் “ தலைநகரில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், மத்திய பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாநில மக்கள் பாஜகவை புறக்கணித்தார்கள். அந்த மாநில மக்களை பழிவாங்குகிற பட்ஜெட்டாக தான் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவோம் எனக் கையெழுத்து போட்டால் தான் நிதியை விடுவிப்போம் என்று என மத்திய அரசு அடம்பிடிக்கிறது . மாணவ, மாணவிகளின் கல்வி பாழாகுமே, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை வருமே என ஒரு துளி கவலை கூட இல்லாமல், தங்களின் கொள்கைத் திணிப்பையும் இந்தித் திணிப்பையும் மட்டுமே முன்னிறுத்தக் கூடியதாகத்தான் பாஜக அரசு இருக்கிறது.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு புதிய அறிவிப்பையும் வெளியிடவில்லை எனக் கூறி திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் “ வரி வாங்க தெரியுது.., நிதி கொடுக்க தெரியாதா? “ என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மத்திய அரசை கண்டித்து  ஒட்டப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேயர் பிரியா , தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, மயிலை வேலு எம்.எல்.ஏ, உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்பாட்டத்தில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார். மேலும் ஆவடியில் முன்னாள் அமைச்சர் நாசர், மதுரையில் கோ.தளபதி எம்.எல்.ஏ, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பேசியதாவது..

“ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்பெண்ணாக இருந்துக்கொண்டே தமிழ்நாட்டை வஞ்சித்துள்ளார் . 2022-23ம் ஆண்டு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகை ரூ.24 ஆகும். ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 220 ரூபாய் திருப்பியளிக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் எப்படி நமது நாட்டின் வளத்தை சுரண்டினார்களோ, அதேபோல இப்போது மத்தியில் ஆளுகின்ற பாஜக செயல்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படி விரட்டினோமோ, அதேபோல வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் விரட்டி அடிப்போம்” என கனிமொழி சோமு எம்பி தெரிவித்துள்ளார்.

source https://news7tamil.live/allegation-that-tamil-nadu-has-been-neglected-in-the-central-budget-dmk-protests-across-tamil-nadu.html