இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு, ஏராளமான முறைகேடு புகார்களில் சிக்கியது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. குறிப்பாக பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதையடுத்து, நுழைவுத்தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் நடத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவில் ரன்தீப் குலேரியா, பி ஜே ராவ், ராமமூர்த்தி கே, பங்கஜ் பன்சால், ஆதித்யா மிட்டல் மற்றும் கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு நீண்ட ஆய்வு நடத்தி தனது பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன தகவல்
இந்நிலையில், நீட் தேர்வு சீர்திருத்தம் தொடர்பான உயர்நிலை நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, நீட் தேர்வு சீர்திருத்தம் தொடர்பான உயர்நிலை நிபுணர் குழு அதன் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும், அவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், எனவே விசாரணையை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், 3 மாதங்களுக்கு விசாரணையை தள்ளி வைத்து, ஏப்ரலில் பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/centre-to-supreme-court-will-implement-recommendations-of-expert-panel-on-neet-ug-exam-tamil-news-8586309