4/1/25
சத்தீஸ்கரில் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகாரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுரேஷ் சந்திரகார் என்பவரது சட்டவிரோத சொத்துகள், அதிகாரிகளால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய சுரேஷ் சந்திரகார், காங்கிரஸ் தலைவர் என அமைச்சர் கூறியுள்ள நிலையில், அவர் பா.ஜ.க-வில் இணைந்து விட்டதாக காங்கிரஸார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சகோதரர்களான ரிதேஷ் சந்திரகார் மற்றும் தினேஷ் சந்திரகார் ஆகியோருடன் சேர்த்து கட்டுமான மேற்பார்வையாளர் மகேந்திர ராம்தேகே என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் சந்திரகார் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் விஜய் ஷர்மா கலந்து கொண்டார். அப்போது, மோசமான சாலை கட்டுமானப் பணிகள் குறித்து டிசம்பர் 25 அன்று முகேஷ் புகார் அளித்ததாகவும், அதற்கு அரசு உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டதில், சுரேஷும் ஒப்பந்ததாரர்களில் ஒருவர் எனத் தெரியவந்தது.
சுரேஷ், காங்கிரஸ் தலைவர் என்றும், சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். ஆனால், இதை மறுத்த காங்கிரஸ், சுரேஷ் பா.ஜ.க-வில் இணைந்ததாகக் கூறியது.
"கொலை சம்பவத்திற்கு பிறகு குற்றவாளிகளுக்கு வலுவான பதில் அளிக்க முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய் முடிவு செய்தார். அவரது உத்தரவின் பேரில்தான் முக்கிய குற்றவாளியின் சாலை கட்டுமான ஆலையை நிர்வாகம் இடித்தது" என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பகிர்ந்து கொண்டார்.
மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "அழிக்கப்பட்ட சொத்து முக்கிய குற்றவாளியான சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமானது. அவர் கடந்த காலங்களில் பல சாலை கட்டுமான திட்டங்களை எடுத்துள்ளார். தற்போது மூன்று சாலை திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட சொத்து, ஒரு கட்டுமான முற்றம் மற்றும் வன நிலத்தை ஆக்கிரமித்து செய்யப்பட்டது. மேலும், குற்றவாளிக்கு சொந்தமான சொத்துகள் இருக்கிறதா எனக் கண்டறிந்து வருகிறோம். மூன்று வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
சந்திரகாரின் சடலம், கடந்த வெள்ளிக்கிழமை சுரேஷின் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த சந்திரகார் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு ஃப்ரீலன்ஸராக பணியாற்றியுள்ளார். அவரது யூடியூப் சானலுக்கு 1.59 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
source https://tamil.indianexpress.com/india/chattisgarh-journalist-murder-three-arrested-govt-bulldozes-main-suspect-property-8591869