அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, மாணவர் இயக்கங்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்திற்கும் சென்னை காவல்துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில், பாமக கட்சி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையிடம் மனு அளித்தனர்.
ஆனால் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு மட்டும் வள்ளுவர்கோட்டம் பகுதியில் போடப்பட்டது.
இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி, பாமக கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார். அப்போது போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று. இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தை அனைவரும் அரிசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல.
வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள். இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.
source https://news7tamil.live/anna-university-student-issue-is-being-politicized-madras-high-court-condemns.html