வியாழன், 25 செப்டம்பர், 2025

கர்நாடகாவில் ‘வாக்கு திருட்டு’: ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பெயர் நீக்கம் செய்ய பயன்படுத்திய 100 போலி சிம் கார்டுகள்

 

கர்நாடகாவில் ‘வாக்கு திருட்டு’: ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பெயர் நீக்கம் செய்ய பயன்படுத்திய 100 போலி சிம் கார்டுகள்


Voter ID

சைபர் குற்றங்களில் பொதுவாகக் காணப்படுவது போல, ஆலந்தில் வாக்காளர் நீக்க விண்ணப்பங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சிம்கள் நாடு முழுவதும் போலி அடையாள அட்டைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பது சி.ஐ.டி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என சி.ஐ.டி வட்டாரங்கள் தெரிவித்தன. Photograph: (Express Photo)

2023 மாநில தேர்தலுக்கு முன்னதாக, ஆலந்த் சட்டசபைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்கான முறையற்ற விண்ணப்பங்கள் குறித்து கர்நாடக சி.ஐ.டி மேற்கொண்ட விசாரணையில், கிட்டத்தட்ட 100 சிம் கார்டுகள் இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் செயலிகளில் (தேசிய வாக்களர்கள் சேவைகள் தளம் அல்லது என்.வி.எஸ்.பி (National Voters’ Services Portal or NVSP), வாக்காளர் உதவி செயலி அல்லது வி.எச்.ஏ (Voter Helpline App or VHA), கருடா) OTP-கள் மூலம் உள்நுழையவும், ஆலந்தின் 254 வாக்குச் சாவடிகளிலும் ஒரு பெயரை நீக்குவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் தனித்தனி சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஆலந்த் தொகுதி, செப்டம்பர் 18-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் மோசடி குறித்து விளக்கமளிப்பதற்காக குறிப்பிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றாகும்.

பிப்ரவரி 2023-ல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு புகாருக்குப் பதிலளிக்கும் விதமாக, வாக்காளர் நீக்க விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யப் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்களை தேர்தல் ஆணையம், செப்டம்பர் 2023-ல் சி.ஐ.டி-யிடம் வழங்கியது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சி.ஐ.டி விசாரணையில், அந்த எண்களின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டனர். அதன்பிறகு, சி.ஐ.டி மேலும் விவரங்களுக்காக விடுத்த கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை, இதைத்தான் காங்கிரஸும், காந்தியும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதால், நாட்டின் வாக்காளர் நீக்கங்களில் இத்தகைய அளவில் முழுமையான கிரிமினல் விசாரணை நடப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம்.

சைபர் குற்றங்களில் பொதுவாகக் காணப்படுவது போல, ஆலந்த் தொகுதியில் வாக்காளர் நீக்க விண்ணப்பங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சிம்கள் நாடு முழுவதும் போலி அடையாள அட்டைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பது சி.ஐ.டி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவை பின்னர், தேர்தல் ஆணையம் செயலிகளில் உள்நுழையவும், உண்மையான வாக்காளர்கள் சார்பாக (பெரும்பாலும் வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர்கள்) நீக்கக் கோரிக்கைகளை தாக்கல் செய்யப் பயன்படுத்தப்பட்டன என்று சி.ஐ.டி வட்டாரங்கள் தெரிவித்தன.

உதாரணமாக, வாக்குச் சாவடி எண் 32-ல், 6 பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு 6 வெவ்வேறு தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, மகானந்தா (அந்த வாக்குச் சாவடியின் வாக்காளர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர்) பெயரில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி எண் 37-க்கான வாக்காளர் பட்டியலில் இருந்து 12 பெயர்களை நீக்க கோதாபாயின் பெயர் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 12 வெவ்வேறு தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

செப்டம்பர் 2023-ல் தேர்தல் ஆணையம், சி.ஐ.டி-யுடன் பகிர்ந்துகொண்ட தரவுகளில், ஆட்சேபனையாளரின் விவரங்கள், அதாவது அவர்களின் படிவக் குறிப்பு எண், இ.பி.ஐ.சி (EPIC) எண் மற்றும் உள்நுழையப் பயன்படுத்தப்பட்ட மற்றும் செயலாக்கத்திற்காக வழங்கப்பட்ட மொபைல் எண், அவர்களின் ஐ.பி முகவரி, படிவம் சமர்ப்பித்த தேதி மற்றும் நேரம், மற்றும் தேர்தல் ஆணைய செயலியின் பயனர் உருவாக்கப்பட்ட தேதி ஆகியவை அடங்கும்.

மேலும் விவரங்களைக் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதங்களில், சி.ஐ.டி கூறியது: “விசாரணையின் போது, ஐ.பி பதிவுகள் வழங்கப்பட்டன. கவனமாகப் பார்க்கும்போது, இலக்கு ஐ.பி (Destination IP) மற்றும் இலக்கு தளம் (Destination Port) ஆகியவை இல்லை. எனவே, அதற்கானவற்றை வழங்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தக் கோரப்படுகிறது.”

தேர்தல் ஆணையம் வழங்கிய ஐ.பி-கள் டைனமிக் ஐ.பி-கள் என்பதையும் சி.ஐ.டி சுட்டிக்காட்டியது. அதாவது, ஆன்லைன் கோரிக்கைகளை சமர்ப்பிக்கப் பயன்படுத்தப்பட்ட சாதனங்களின் புவி இருப்பிடத்தை இவற்றைக் கொண்டு கண்டறிய முடியாது.

சி.ஐ.டி கோரிய கூடுதல் தகவல்களில்: என்.வி.எஸ்.பி (NVSP) மற்றும் வி.எச்.ஏ (VHA) செயலிகள், தளங்களில் ஓ.டி.பி (OTP)/மல்டிஃபாக்டர் அங்கீகாரம் வசதி உள்ளதா; நீக்க விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு ஓ.டி.பி (OTP)/அங்கீகாரம் வசதி பொருந்துமா; மேலும் ஓ.டி.பி (OTP) போன்ற அங்கீகாரம் இருந்தால், அது உள்நுழையப் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படுகிறதா, அல்லது விண்ணப்பதாரர் நீக்கப் படிவத்தில் வழங்கிய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படுகிறதா அல்லது இரண்டுக்கும் அனுப்பப்படுகிறதா என்பதும் அடங்கும்.

வாக்காளர் பட்டியல்களை அணுகப் பயன்படுத்தப்படும் செயலிகள் தேர்தல் ஆணையத்தின் சொத்துகள் என்பதால், சி.ஐ.டிக்கு தேர்தல் குழுவின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் ஆணையம் அதை தானாகவே பகிர்ந்து கொள்ளாத பட்சத்தில், சட்டப்பூர்வ வழிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

செப்டம்பர் 2023-ல் தேர்தல் ஆணையம் வழங்கிய தொலைத்தொடர்பு தரவுகளும் தகவல்களும், விண்ணப்பங்கள் ஒரு மைய இடத்திலிருந்து தாக்கல் செய்யப்பட்டன என்பதைக் குறிப்பதாக சி.ஐ.டி வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, அனைத்து போலி ஆட்சேபனையாளர்களும் ஒரு பொதுவான இடத்தில் அமர்ந்து இந்த வேலையைச் செய்துள்ளனர். தனது செய்தியாளர் சந்திப்பில், இது கர்நாடகாவுக்கு வெளியே அமைந்துள்ள ஒரு வசதி என்று காந்தி கூறினார்.

பெரிய அளவிலான நீக்கங்கள் குறித்த காந்தியின் குற்றச்சாட்டுகளை தேர்தல் அதிகாரிகள் மறுத்து, எந்தவொரு நபரின் பெயரும் விண்ணப்பத்தின் அடிப்படையில் மட்டுமே நீக்கப்படுவதில்லை அல்லது சேர்க்கப்படுவதில்லை, முதலில் உள்ளூர் பூத் லெவல் அதிகாரிகளால் அது உடல் ரீதியாக சரிபார்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

ஆலந்த் தொகுதி விஷயத்தில், நீக்கக் கோரப்பட்ட 6,018 பெயர்களில் 24 விண்ணப்பங்கள் மட்டுமே சரியானவை என்று ஆவணங்கள் ரீதியான சரிபார்ப்பில் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


source https://tamil.indianexpress.com/india/karnataka-vote-chori-100-sim-cards-fake-idvoter-deletions-aland-10498032