விஜய் கூட்டத்தில் பதிவு எண் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தது? - கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க) தலைவர் விஜய் நேற்று முன்தினம் (செப்.27) கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்டம் கலைந்து செல்லும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். துயரம் படிப்படியாக அதிகரித்து, இந்தச் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோக நிகழ்வுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரூர் சம்பவம் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: விஷச் சாராய மரணத்தின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? விஜய் பேச ஆரம்பித்தபோது விளக்குகள் அணைந்தன. செருப்பு வீசப்படுகிறது. காவல்துறை தடியடி நடத்துகிறது. விஜய் பேச ஆரம்பித்தபோது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வாகனம் எப்படி வந்தது? இரவோடு இரவாக பிரேத பரிசோதனை நடந்தது. சாலையில் கூட்டம் நடத்தினால் ஆம்புலன்ஸ் வரும் என்கின்றனர். தி.மு.க. ஆகாயத்திலா கூட்டம் நடத்துகிறது?
விஜய் கூட்டத்தில் பதிவெண் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தது. அதைத்தான் பழனிசாமி கூறினார். 40 ஆம்புலன்ஸ் தயார் செய்து அதில் தி.மு.க மருத்துவ அணி என அக்கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இரவோடு இரவு வருவதையும் நிவாரணம் தருவதையும் ஸ்டாலின் பெருமையாக கூறுகிறார். கரூர் சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரிய சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/karur-stampede-mr-vijayabhaskar-demands-cbi-probe-questions-cm-stalins-silence-10514526