ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

மத்திய அரசு தேர்தல் கமிஷனை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கிறது - கனிமொழி

 

மத்திய அரசு தேர்தல் கமிஷனை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கிறது - கனிமொழி

kanimozhi

கன்னியாகுமாரி கிழக்கு மாவட்டம் சார்பாக ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ மற்றும் ஓரணி​யில் தமிழ்​நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நாகர்கோவில் பகுதியில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில்,  திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை இயக்கத்தின் வாயிலாக திமுகவில் இணைந்தவர்கள், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் வந்ததால், தனது பேச்சை நிறுத்தி, ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு கனிமொழி எம்.பி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியதாவது; ஓரணியில் திரண்டு இருக்கக்கூடிய இந்த கூட்டத்தை பார்த்தபோது, ஒரு பொதுக் கூட்டம் போல் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஒரு மாநாடு போல திமுக மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார். இவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும், ஆம்புலன்ஸ் வந்தபோது எங்கள் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அதற்கும் வழிவிட்டார்கள். அதற்குக் காரணம், 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தவர் கலைஞர். உயிரின் மதிப்பை அறிந்தவர்கள் நாம்; எல்லோரையும் சமமாக நினைத்த தெரிந்தவர்கள் நாம். சிலர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், அந்த ஆம்புலன்ஸை ஓட்டும் ஓட்டுநர்களையே விரட்டியடிக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட மனிதர்களை நாம் இந்தத் தேர்தலில் எதிர்கொள்கிறோம் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு மேலான உதாரணம் இருக்க முடியாது. மனித உயிர்களின் மீது அக்கறையே இல்லாதவர்களை, அவர்கள் கூட்டணியாக வைத்திருக்கிறார்கள்.

அதைவிட மனிதர்களின் உரிமைகள், இந்த நாட்டின் உரிமைகள், மாநில உரிமைகள், ஜனநாயகம் ஆகிய அனைத்தையும் புதைத்து விட வேண்டும் என்று நினைக்கும் பாஜகவுடன் கூட்டணி. ஒன்று துரோகம், இன்னொன்று மனித உரிமை பறிப்பு - இந்த இரண்டும் சேர்ந்து தேர்தலில் நமக்கு எதிரணியாக உள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் நம்முடைய கடமை என்ன என்பதை நினைவூட்டும் வகையிலும், உறுதிமொழியுடன் இந்தக் கூட்டத்தை தொடங்கியிருக்கிறோம். முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் அந்த உறுதிமொழியை நான் மறுபடி மறுபடி மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்று தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய உரிமைகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய மண்ணில், என்னுடைய முதல் கூட்டத்தில் பேசுவதில் நான் பெருமை அடைகிறேன். தோள்சீலைப் போராட்டத்திலிருந்து தொடங்கி, தமிழ்நாட்டின் எல்லைப் போராட்டம் வரை.  தமிழ்நாடு முழுவதும் மொழிப் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த அதே காலகட்டத்தில், தமிழ்நாட்டின் எல்லைக்காகவும் போராடியது இந்த மண்.

அந்த போராட்டத் தியாகிகளை 1974 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு இணையான தியாகிகள் என்று அரசு அங்கீகரித்தது. இப்படி எத்தனையோ போராட்ட வரலாறுகளை கொண்டிருக்கக் கூடிய மண் இந்த மண். அந்த மண்ணில் நின்று கொண்டு, இன்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லும் வகையில், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தொடர்ந்து பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் உரிமைகள் எந்த அளவுக்கு பறிக்கப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறோம். நம்முடைய மாணவர்கள் படிப்பதற்காக நமக்கு வழங்கப்பட வேண்டிய SSA திட்டத்திற்கு,அவர்கள் நமக்கு புரியும் மொழியில் பெயர் வைக்கவில்லை. அதை எழுதிக் கொண்டே வர வேண்டும் - 'சமக்ரா சிக்ஷா அபியான்'. அதற்கு என்ன அர்த்தம் என்று இன்று கேட்டால், எனக்கே தெரியவில்லை.

‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்ற திட்டத்தின் வழியாக, தமிழ்நாட்டில் உள்ளவர்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம், இருமொழிக் கொள்கையை கைவிட்டு மூன்று மொழிகளில் இந்தியை திணிப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று கையெழுத்திடுமானால், நமக்கு வழங்கப்பட வேண்டிய, நம்ம வீட்டு பிள்ளைகள் படிப்பதிற்கு, ஒன்றிய பாஜக தர வேண்டிய 5,000 கோடிகளை தருவார்கள்; இல்லையென்றால் தரமாட்டார்கள்.

எவ்வளவு போராட்டத்திற்கு பிறகு, நம்முடைய பிள்ளைகள் படிக்கக்கூடிய சூழலை இந்த மண்ணில் நாம் பெற்றிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு காலகட்டத்தில் பிள்ளைகளை படிக்க விடமாட்டார்கள். இங்கே இருக்கக்கூடிய பெரியவர்களை கேட்டால் தெரியும். 'எதற்கு படிப்பு, வீட்டில் இரு' என்று சொல்வார்கள். சில பேருக்கு மட்டுமே கல்வி கிடைக்கும், மற்றவர்களுக்கு கல்வி கற்பதற்கான உரிமை கிடையாது.

ஜாதியின் பெயரால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலங்கள் எல்லாம் இருந்தது. இன்றைய தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லாத பிள்ளைகள் எவரும் இல்லை. இந்தியாவில் அதிகமாகக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உள்ள மாநிலங்களில், முதல் அல்லது இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் கூட 30 ஆண்டுக்குப் பிறகு 50 சதவீதத்தை தொடுவார்கள்; ஆனால் நாம் அதை ஏற்கனவே கடந்து விட்டோம்.

ஆனால் அந்த நிலையை அடைவதற்கு எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டது. நீதி கட்சி தொடங்கி திராவிட இயக்கப் போராட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் அடைந்த சாதனைகள். இவற்றின் எல்லாவற்றுக்கும் பெண்கள் படிக்கவேண்டும், பள்ளிப் படிப்பை முடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில், கலைஞர் திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார்.  அதுமட்டுமில்லாமல் முதல் தலைமுறை சார்ந்து இருக்கக்கூடிய மாணவ மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், கட்டணமில்லா கல்வி என்று எத்தனையோ திட்டங்கள். ஒவ்வொரு சின்னச் சின்ன ஊர்களிலும் கல்லூரி தொடங்கியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான்.

இத்தனை முன்னெடுப்பு செயல்பாடுகளின் பிறகு தான் இந்த சாதனையை நாம் தொட்டு இருக்கிறோம். ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி, இந்தி படி, நாங்கள் சொல்லக்கூடிய விதத்தில் தான் பள்ளிக்கூடங்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். எந்தக் குலக் கல்வியை எதிர்த்து போராடி வெற்றி பெற்றோமோ, அதே குலக் கல்வியை இப்போது கொண்டு வருகிறார்கள். இதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே 5,000 கோடியை மாணவர்கள் படிக்கச் செய்ய தருவோம் என்று சொல்கிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை உருவாக்க வேண்டும் என்றும். தனியார் கல்லூரிகளில்  எல்லாராலும் செல்ல முடியாது என்பதால், அதை  நாசம் செய்ய கூடிய வகையில், நீட்தேர்வுவை கொண்டு வந்து, மாணவர்கள் மீது திணிக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படித்தால்தான், மருத்துவ கல்லூரிக்கு போக முடியும். அவர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆக வேண்டும் என்று இருந்தது. அதை உடைத்து மாற்றியது திராவிட இயக்கம். இன்று எல்லோரும் மருத்துவர்கள் ஆகக்கூடிய நிலையை உருவாக்கிய நிலையில், அதை அழிக்க நினைத்து நீட் தேர்வுகளை ஒன்றிய பாஜக கொண்டு வந்துள்ளது.

ஜிஎஸ்டி கொண்டு வந்து, அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி எல்லாம் வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள். தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 9.2%, ஆனால் அதில் நமக்கு வழங்கப்படுவது வெறும் 4% தான். சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார், நாங்கள் மொழியை திணிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, ஆனால் அறிவியலை இந்தியில் படிக்க வேண்டுமா, முக்கிய பாடங்களை இந்தியில் படிக்கச் செய்ய வேண்டும் என்று திணிக்கும் ஆட்சியே நடக்கிறது.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில், ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினால், இந்தியில் பதில் வருகிறது, சில நேரம் பதில் வரவில்லை. என்னோட தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பிரச்சனைகளைப் பற்றி எழுதுகிறேன். எனக்கு தெரியாது, படிக்க தெரியாது, பேசினால் புரியாது, எனக்கு தேவையும் இல்லை. 

ஆனால், உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் என்னால் தமிழனும் படிக்க முடியும்; அதே நேரத்தில் ஆங்கிலத்திலும் படிக்க முடியும். ஆங்கிலமும் தமிழும் படிக்க தெரிந்ததால்தான் சிலிக்கான் வேலி முழுவதும் இருக்கக்கூடியவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள். என்னுடைய தொகுதியில் உள்ள பிரச்சனைகளை நான் கடிதமாக அனுப்புகிறேன்; பதில் எனக்கு இந்தியில் வருகிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்டால், நாமெல்லாம் நக்சலைட்டுகள், அர்பன் நக்சல் என்று கூறுவார்கள். இந்தியாவிற்கு எதிராக செயல்படக்கூடியவர்கள், நாட்டுக்கு எதிராக பேசக்கூடியவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறவர் ஆர்.எஸ்.எஸ் தான்.

பிரதமர் கொடியேற்றி விட்டு, அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெருமையெல்லாம் பேசினார். ஒரு பெருமையை மறந்துவிட்டார். அந்தப் பெருமை என்னவென்றால், முதன்முதலாக சுகந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தை தாக்க சென்றது ஆர்.எஸ்.எஸ் தான். பசுவதை தடைச் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறது, ஒரு கோரிக்கையை முன்வைக்கிறது. இதனை எதிர்த்து பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் டெல்லியில் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்.

அதற்கு, ஆர்எஸ்எஸ் இயக்கம் எல்லாம் இணைந்து, 1966ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியில் டெல்லியில் பேரணியாக வந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு தாக்க முற்படுகிறார்கள். இது சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தை முதன்முறையாகத் தாக்கிய பெருமையாகும். பாகிஸ்தானிலிருந்து வந்த தாக்கவில்லை, வேறு நாடுகளிலிருந்து வந்த தாக்கவில்லை, நக்சலைட் என்று சொல்வார்கள், ஆனால் அவர்கள் தக்கவில்லை.

எந்த ஆர்எஸ்எஸின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறாரோ, அந்த ஆர்எஸ்எஸ் தான் இந்திய பாராளுமன்றத்தை முதன்முறையாக தாக்கியவர்கள். காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளையும் முற்றுகையிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் தாக்க முயன்றவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வீட்டுக்கு தீ வைத்தவர்கள், அவரை காப்பாற்றுவது பெரும் சவாலாகிய சூழலை உருவாக்கியவர்கள் ஆர்எஸ்எஸ் தான் என்றார்.

ஒன்றிய பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் வழியாகவே வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளும் முறையில் செயல்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியே அங்கே பதவிக்கு வரவேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டால், அது தான் இறுதியான முடிவு. ஆட்சியைச் செய்யக்கூடியவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், தேர்தல் கமிஷன் கையில் வைத்துக்கொண்டு, ஆட்சியைப் பிடித்து இருக்கிறார்களோ என்று தெரியவில்லை. 

எத்தனையோ மாநிலங்களில், ஒரு தொகுதியில் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வாக்குகள் காணாமல் போகிறது. புதிதாக வாக்குகளைச் சேர்க்கின்றனர். முக்கியமாக, சிறுபான்மை மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில், தலித் மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில், மற்றும் பெண்கள் அதிகமாக வாக்களிக்கும் பகுதிகளில் வாக்குகள் காணாமல் போகின்றன.

பிஹாரில் SIRக்குப் புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்பெஷல் இன்டென்சின் ரெவிஸன்’ என்பதனை மாற்றி ‘ஷா இன்டென்சின் ரெவிஸன்’ எனும் பெயர் வைத்துள்ளனர். அமித் ஷா நினைப்பதை செய்துகொள்ளும் ஒரு கருவியாக தேர்தல் கமிஷன் மாறிவிட்டது. பிஹாரில் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கப் போகிறது. ஆயிரக்கணக்கான வாக்குகள் ஒவ்வொரு தொகுதியிலும், இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில், யார் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்பதைக் கணக்கில் வைத்து, அந்தப் பகுதிகளில் உள்ள வாக்குகள் காணாமல் போய்விடுகின்றன அல்லது குறைக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் கமிஷனை கையில் வைத்துக்கொண்டு, இந்த நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் வாக்குரிமையையும் குழி தோண்டிப் பறிக்க கூடிய ஒரு செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாக்கு உரிமைதான் நமது அடிப்படை உரிமை. அதை, நம்மிடம் இருந்து யாரும் பறித்துவிடக் கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணம், ஒரு பகுதியில் 120 பேரை ஒரு வீட்டில் சேர்த்து உள்ளார்கள். எப்படிப்பட்ட வீடாக இருக்கும்? பெரிய பங்களாவை என்னவாயிருக்கும் போயிருக்காங்க? காங்கிரஸிலிருந்து வாக்கு பட்டியலை  வாங்கிக்கொண்டு எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த 120 பேர் வாசிக்கக்கூடியது ஒரு அரை மட்டும், அதில் 2 பேர்தான் வசித்து வருகின்றனர், அவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை.

அந்த முகவரியில் இருந்து, 120 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மோசடி நடைபெறுகிறது என்றால் நாடு முழுவதும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மற்ற எல்லாவற்றையும் விட்டு வைக்கலாம், ஆனால் நமது அடிப்படை உரிமையையே கூட நமக்கு வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு இருக்கிறது.

அவர்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு கொண்டிருக்க கூடிய அதிமுக ஆக இருக்கட்டும், அவர்களுக்கு நாம் என்றும் இடங்கொடுத்து விடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவை தொடங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ‘அண்ணா-இஸம்’ என்று மேடையில் சொல்லுவார். இப்போது அங்கே தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்கள் ‘அமித் ஷா-இஸம்’ என்று சொல்கிறார். எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களது அலுவலகத்தில் தீர்க்கப்படுவது இல்லை; அஅடுத்த பிளைட் பிடித்து, யாரா இருந்தாலும் டெல்லிக்குதான் அனுப்பப்படுகிறார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றிவிட்டுள்ளனர். அமித் ஷா சொல்வதையே அதிமுக தலைவர்கள் கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இப்படி ஒரு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

டெல்லியில் அமர்ந்து, யார் யாரெல்லாம் தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கிறார்களோ, மக்கள் மனித உரிமைகளை எல்லாம் பறித்துக் கொண்டிருப்பார்களோ - அவர்களுக்கு அடிபணிந்து, இன்று தன்னுடைய கட்சியை அடக்கி வைத்துக் கொண்டிருப்பவர்கள் நமக்கு எதிராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  எந்த காலகட்டத்திலும் இப்படிப்பட்டவர்களுக்கு தமிழ் மண்ணிலும் தமிழ்நாட்டிலும் இடம் கொடுக்கக் கூடாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நான்கு வருடம், ஆளையும் காணோம்; தேர்தல் வந்த உடனே, ஒரு பஸில் மேல் நின்று வலம் வருகிறார்கள். 'நாம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை' என்று சொல்கிறார்.

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. விடியல் பயணம் மூலம் பெண்கள் கிட்டத்தட்ட 1,000 ரூபாய் சேமித்துக் கொண்டு இருக்கிறார்கள். புதுமைப்பெண் திட்டம்,  தமிழ் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், இன்னுமுயற் காப்போம் திட்டம் என்று பல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். இன்று தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் மருத்துவ முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகை, விடியல் பயணத்தின் மூலம் பெண்கள் கிட்டத்தட்ட 1,000 ரூபாய் சேமித்து கொண்டுள்ளனர். புதுமைப்பெண் திட்டம், தமிழ் முதல்வர் திட்டம், காலை உணவுத் திட்டம், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 போன்ற பல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்கள், தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள், உயர் கல்விக்கான புதிய திட்டங்கள், 'நான் முதல்வன்' திட்டம் போன்றவற்றை, கோரிக்கை வருவதற்கு முன்னரே செயல்படுத்திக் காட்டும் நல்லாட்சி நிலவி வருகிறது. இந்த ஆட்சியை தொடர வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வேறு யாரும் தமிழருடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்தாதபடி, தமிழர்களுடைய பெருமைகளையெல்லாம் அங்கீகரிக்காத ஒன்றிய அரசு செயல்படுகிறது. கீழடி பற்றிய அந்த ஆய்வறிக்கைகளை அவர்கள் வெளியிட மறுக்கிறார்கள்.

இரும்புக் காலம் இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் தொடங்கியது என்று நாம் கண்டுபிடித்து வெளியிட்ட ஆய்வறிக்கையைப் பற்றி பிரதமர் ஒருவார்த்தையும் பேசவில்லை; அதை அங்கீகரிக்கவில்லை. தமிழ் மொழியை அங்கீகரிக்க மறுக்க கூடிவர்களுக்கு, இந்த மண்ணில்  இடம் கொடுத்துவிடக் கூடாது. தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிடக்கூடாது என்ற உறுதியை நானும் எடுத்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டை நாம் அரணாக நின்று பாதுகாக்க வேண்டும்.

அடுத்த ஆட்சி மட்டும் இல்லை. இனிமேல் தமிழ்நாட்டில் துரோகிகளுக்கு, தமிழ் இனத்தின் மானத்தையும் தமிழர்களின் எதிர்காலத்தையும் கெடுக்கக் கூடிய யாருக்கும் இடமில்லை" என்று பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயருமான மகேஷ், தமிழ்நாடு உணவுக் கழக தலைவர் சுரேஷ் ராஜன், திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-has-accused-the-central-government-of-burying-the-countrys-democracy-10484724