/indian-express-tamil/media/media_files/2025/09/14/madurai-high-court-5-2025-09-14-16-24-35.jpg)
மதுரை இளைஞர் முத்து கார்த்திக் போலீஸ் கொடுமையில் உயிரிழந்த விவகாரத்தில் 4 காவலர்களுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயாவின் மகன் முத்து கார்த்திக் (17), குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக 2019-ம் ஆண்டு எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது போலீசார் அவரை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் படுகாயமடைந்த முத்து கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் உயிரிழந்தார்.
மகனின் மரணத்திற்குக் காரணமான போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதன்படி விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐடி, எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ், காவலர்கள் சதீஷ், ரவி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வர்மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பளித்தார். மேலும், சாட்சிகளை அழிக்க முயன்ற காவலர்களுக்கு துறைத்தரப்பட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையில் உடலில் இருந்த காயங்களை மறைக்க முயன்ற அரசு மருத்துவர்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-bench-of-madras-high-court-order-11-year-prison-to-4-police-personnel-in-youth-custody-death-case-tamil-news-10505119