27 09 2025
/indian-express-tamil/media/media_files/2025/09/27/vijay-karur-stampede-2025-09-27-23-10-17.jpg)
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
தனது மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். நாமக்கலில் பிற்பகலில் பரப்புரை முடிவடைந்த நிலையில், கரூரில் மாலையில் பரப்புரை செய்தார்.
கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். இந்நிலையில், த.வெ.க பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்தநிலையில், கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட சோகம் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கரூர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்
source https://tamil.indianexpress.com/tamilnadu/central-govt-home-ministry-seeks-explanation-report-from-tamil-nadu-on-tvk-vijay-campaign-stampede-in-karur-10508895