லடாக் வன்முறை: செய்தியாளர்களை சந்திக்க முயன்ற சோனம் வாங்சுக் அதிரடி கைது 26 09 2025
/indian-express-tamil/media/media_files/2025/09/26/sonam-sukshu-2025-09-26-19-18-54.jpg)
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை கோரிப் போராடி வந்த முக்கியச் செயல்பாட்டாளரும், சூழலியல்வாதியுமான சோனம் வாங்சுக் வெள்ளிக்கிழமை லே பகுதியில் காவல்துறையினரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மத்திய அரசு தீவிரமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், இந்தக் கைது நடவடிக்கை லடாக்கின் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று லேயில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நான்கு நபர்கள் உயிரிழந்தனர்; மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரமான சம்பவங்களைத் தூண்டியதாக வாங்சுக் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அவருடைய "தூண்டும் அறிக்கைகள்" காரணமாகவே கூட்டம் வன்முறையில் ஈடுபட்டதாகவும், பேச்சுவார்த்தையில் ஏற்படும் முன்னேற்றத்தை விரும்பாத "அரசியல் உள்நோக்கம் கொண்ட தனிநபர்கள்" சிலர், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை நாசப்படுத்த முயற்சிப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
கைது செய்யப்படுவதற்குச் சற்றுமுன், வாங்சுக் லேயில் உள்ள ஹோட்டல் அப்துஸ்ஸில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பு ஜூம் மூலமாகவும் ஒளிபரப்பப்படுவதாக இருந்தது. அவரது செயலாளர் கூட்டத்தைத் தொடங்கியபோதும், சோனம் வாங்சுக் அதில் கலந்துகொள்ளவில்லை. அவர் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாகவே, அவர் தனது கிராமத்திலிருந்து லே நோக்கி வந்து கொண்டிருந்த வழியில் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
லே உச்ச அமைப்பின் (Leh Apex Body - LAB) சட்ட ஆலோசகர் முஸ்தபா ஹாஜி, “சோனம் வாங்சுக் தனது கிராமத்திலிருந்து லே நோக்கி வந்து கொண்டிருந்தபோது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்,” என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
லடாக் கோரிக்கைகளை வலியுறுத்தி, LAB அமைப்பில் அங்கம் வகிக்கும் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்தார். வன்முறை வெடித்ததைக் கண்டு, அவர் தனது உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிட்டார். அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு நபர்கள் மயக்கமடைந்ததையடுத்து, சிலர் ஆத்திரத்தில் வன்முறையைக் கையிலெடுத்ததாகவும், பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. வன்முறை வெடித்தபோதும்கூட, வாங்சுக் அமைதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
வாங்சுக் மீதான அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இந்தக் கையெழுத்துடன் நிற்கவில்லை. வாங்சுக் நிறுவிய 'லடாக் மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம்' (Students’ Educational and Cultural Movement of Ladakh) என்ற அமைப்பின் FCRA உரிமத்தை மறுநாளே மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அவர் நிறுவிய 'இமயமலை மாற்று வழிகள் நிறுவனம் லடாக்' (Himalayan Institute of Alternatives Ladakh) மீதும் FCRA விதிமீறல்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.
வாங்சுக் கைதுக்கு லே உச்ச அமைப்பின் துணைத் தலைவர் சேரிங் டோர்ஜே லாக்ரக் "மிகவும் துரதிர்ஷ்டவசமான வளர்ச்சி" என்று கருத்து தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தக் கைது சம்பவம் "துரதிர்ஷ்டவசமானது" என்று கூறினார். "நேற்று முதல் மத்திய அரசு அவர் பின்னால் சென்ற விதம் பார்த்தால், இது வெளிப்படையாகத் தெரிந்தது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு வாக்குறுதிகளை அளிக்கிறது, ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் ஓமர் அப்துல்லா முன்வைத்தார். ஹில் கவுன்சில் தேர்தலுக்கு முன்பு மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தபோது, ஒரு மத்திய அமைச்சர் லே சென்று அவர்களுக்குச் சில வாக்குறுதிகளை அளித்து அவர்களைத் தேர்தலில் பங்கேற்க வைத்தார். மக்கள் பங்கேற்றது மட்டுமல்லாமல் பாஜகவை வெற்றி பெறச் செய்தனர், ஆனால் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.
தனக்கெதிராக மத்திய அரசு 'பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை' (Public Safety Act) பயன்படுத்திக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்க முயற்சிப்பதாக வாங்சுக் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனாலும், அவர் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. வியாழக்கிழமை அன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், சிறையில் இருக்கும் சோனம் வாங்சுக், வெளியே இருக்கும் சோனம் வாங்சுக்கை விட அவர்களுக்கு அதிகப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்,” என்று மத்திய அரசுக்குச் சவால் விடுத்துள்ளார். லடாக் மக்களின் போராட்டத்தின் குரலாய் ஒலிக்கும் சோனம் வாங்சுக்-இன் கைது, இந்தக் கோரிக்கைப் போராட்டத்தின் போக்கையும், மத்திய அரசின் அணுகுமுறையையும் எந்த வகையில் மாற்றப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.