செவ்வாய், 30 செப்டம்பர், 2025

9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு... மத்திய அரசின் இந்த கல்வி உதவித்தொகையை பெறுவது எப்படி?

 

pm yasasvi scholarship 2025

9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு... மத்திய அரசின் இந்த கல்வி உதவித்தொகையை பெறுவது எப்படி?

இதர பிற்படுத்தப்பட்டோர் (BC), மிக பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் கல்வி உதவித் தொகைத் திட்டம் ('யசஸ்வி' - PM YASASVI) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டுக்கான இந்தத் திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

யார் விண்ணப்பிக்கலாம்?

இதர பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

வருமான வரம்பு: மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

கடந்த நிதி ஆண்டில் (2024-25) இத்திட்டத்தின்கீழ் பலனடைந்த மாணவர்கள், தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உள்ள Renewal Application என்ற இணைப்பிற்குச் சென்று, தங்கள் ஓ.டி.ஆர். எண்ணைப் பதிவு செய்து, 2025-26ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க விரும்பினால், (https://scholarships.gov.in) இந்த இணையதளத்தில் சென்று செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி, புதிய விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க இறுதித் தேதி: மாணவர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

சரிபார்ப்பு தேதி: கல்வி நிறுவனங்கள் இந்த விண்ணப்பங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.

பள்ளிகள் விவரம்: பட்டியலிடப்பட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம். திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தேசியக் கல்வி உதவித்தொகை இணையதளத்தை அணுகலாம் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

30 09 2025


source https://tamil.indianexpress.com/education-jobs/pm-yasasvi-scholarship-2025-26-application-open-for-bc-mbc-dnc-students-10514591