பூத் ஏஜெண்டுகள் நியமனத்தில் புதிய விதிமுறைகள்: தேர்தல் ஆணையம் உத்தரவு
/indian-express-tamil/media/media_files/2025/09/23/booth-agents-2-2025-09-23-00-44-43.jpg)
இதன் மூலம், பூத் ஏஜெண்டுகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், வாக்குச் சாவடிகளுக்கு நியமிக்கும் பூத் ஏஜெண்டுகள் (பி.எல்.ஏ.2) குறித்து தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம், பூத் ஏஜெண்டுகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இத்துடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பூத் ஏஜெண்டுகள் மூலமாகவும் இந்தப் பணிகளைச் செய்ய முடியும். தேர்தல் அதிகாரிகளுடன் நேரடியாகச் செயல்படும் இவர்கள், வாக்காளர் பட்டியலின் துல்லியத்தன்மைக்கு உதவுவார்கள்.
முன்னதாக, அரசியல் கட்சித் தலைவர்கள் பூத் ஏஜெண்டின் பெயரை மட்டும் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைப்பார்கள். ஆனால், வாக்குப்பதிவு முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி போன்ற அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், தேர்தல் ஆணையம் இந்தப் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.
புதிய விதிமுறைகள்
தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் தங்கள் பூத் ஏஜெண்டுகளைப் பரிந்துரைக்கும்போது, ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். அந்தப் படிவத்தில், பூத் ஏஜெண்டின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன், அவர் அந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதற்கான ஆதாரம் மற்றும் புகைப்படம் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
இந்த புதிய நடைமுறை, பூத் ஏஜெண்டுகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதோடு, வாக்காளர் பட்டியல் தொடர்பான நடவடிக்கைகளில் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 68,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு பூத் ஏஜெண்டை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும். கட்சிகள் தற்போது இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.