அரசியலுக்கு 6 மாதம் கால்ஷீட்
/indian-express-tamil/media/media_files/2025/09/21/aloor-shanavas-vijay-2025-09-21-17-01-29.jpg)
த.வெ.க தலைவர் விஜய் அடிப்படை புரிதல் இல்லாமல் வன்மத்தோடு பேசுகிறார். இட்டுக்கட்டிய பொய்களை பேசுகிறார் என நாகப்பட்டினம் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
த.வெ.க தலைவர் விஜய் சனிக்கிழமை மாலை நாகை, திருவாரூரில் பரப்புரை மேற்க்கொண்டார். இந்த பரப்புரையில் பல்லாயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருந்து விஜய்யின் பேச்சைக் கேட்டு ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில் விஜய் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது;
"அண்ணாமலை, ஆளுநர் ரவியை தொடர்ந்து அவதூறான இட்டுக்கட்டிய பொய்களை, வாய்க்கு வந்ததை விஜய் பேசத் தொடங்கியுள்ளார். நாகப்பட்டினத்தில் முழுக்க முழுக்கப் பொய் தகவல்களை பரப்பிவிட்டுச் சென்றுள்ளார். இப்படியே பேசினால் மக்களால் நிராகரிக்கப்படுவார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பத்திரிகையாளர்களை சந்திக்க துணிச்சல் இல்லை. உண்மைக்கு புறம்பான பொய்களை விஜய் பரப்பி உள்ளார். தொடர்ந்து விஜய் பொய் கூறினால் மக்களால் நிராகரிக்கப்படும் நிலை உருவாகும். சினிமாவின் கவர்ச்சியால் விஜய்க்கு கூட்டம் கூடியுள்ளது. பொய்யைச் சொல்லி கவனத்தை ஈர்க்கும் பா.ஜ.க.,வின் அணுகுமுறையை கையில் எடுத்துள்ளார் விஜய். அவர் நேற்று (செப்டம்பர் 20) நாகையில் பேசியது அனைத்தும் பொய். அடிப்படை புரிதல் இல்லாமல், வன்மத்தோடு பேசுகிறார்.
விஜய் அரசியலை நேர்மையாக செய்யலாம். புதிய அரசியலை செய்யலாம். அதை விட்டுவிட்டு ஏற்கெனவே மண்ணில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டிய அரசியலான அவதூறு அரசியல், வன்ம அரசியலை விஜய் ஏன் கையில் எடுக்கிறார். ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களை செய்யவே இல்லை என விஜய் சொல்வதன் நோக்கம் என்ன? படத்துக்கு 6 மாதம் கால்ஷீட் கொடுத்தது போல், அரசியலுக்கு தற்போது 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். அவரின் அரசியல் தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்தது அல்ல.
விஜய் பரப்புரையின்போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என அவர் கட்சியின் மாவட்டச் செயலாளர் தான் கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் விஜய். முன்னுக்குப் பின் முரணாக பொய்யை சொல்லி கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார்.” இவ்வாறு ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்