திங்கள், 22 செப்டம்பர், 2025

மக்களின் தூக்கத்தைக் கெடுத்து சிவராத்திரி ஆக்கியது யார்?’ - சு.வெங்கடேசன் கேள்வி

 Su Venkatesan MP 2

“கடந்த 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தது யார்” என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, நவராத்திரி தொடக்க நாளில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு அமலுக்கு வருவதாகக் கூறிய நிலையில், “கடந்த 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தது யார்” என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரை குறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“நவராத்திரி தொடக்கத்தில் ஜிஎஸ்டி சலுகை அமலாகிறது என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தைக் கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு? 

இத்தனை ஆண்டுகளாக யார் விவசாயிகள், பெண்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை வாட்டி எடுத்தது? யார் குடும்பங்களின் மகிழ்ச்சியைக் குலைத்தது?” என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களைச் சந்திக்க எப்போதும் மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, வழக்கம் போல் தொலைக்காட்சியில் ஒருவழி பேச்சாக உரையாற்றியுள்ளார் என்று சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். ஜி.எஸ்.டி குறைப்பால் பெண்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி பேசியதாகக் குறிப்பிட்ட சு.வெங்கடேசன், கடந்த 8 ஆண்டுகளாக மக்களைக் கொள்ளையடித்துவிட்டு இப்போது அளிக்கப்படும் அற்ப சலுகைக்கு ஏன் இவ்வளவு ஆரவாரம் என்றும் கேட்டுள்ளார்.

மேலும், இந்தச் சலுகை மக்களுக்குப் போய்ச் சேருமா, அதற்கு என்ன உத்தரவாதம் என்றும் வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். “உங்கள் கார்ப்பரேட் நண்பர்கள் இதற்கு விடுவார்களா? கார்ப்பரேட் வரிகளை உயர்த்தி மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்குவீர்களா? மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறை வராமல் உறுதி செய்வீர்களா?” என்றும் சு.வெங்கடேசன் தனது பதிவில் கேட்டுள்ளார்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/su-venkatesan-question-who-made-it-shivaratri-by-disturbing-peoples-sleep-for-8-years-pm-modi-says-gst-reduce-in-navarathri-festival-10486162