இந்த சம்பவம் குறித்து கரூர் ஆட்சியர் தங்கவேல், ஏடி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், கரூர் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கரூர் ஆட்சியர் தங்கவேல், ஏடி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், கரூர் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தமிழ்நாடு மின்சார வாரியம், கரூர் மாவட்டம், தலைமைப் பொறியாளர் கரூர் மின்பகிர்மான மண்டலம், சே ராஜலட்சுமி கூறுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்றிக்கொண்டிருந்தபோது தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அனைத்து புகைப்படங்களிலும் சம்பவம் நடைபெற்ற போது தெருவிளக்குகளின் வெளிச்சம் மற்றும் கடைகளில் வெளிச்சம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே விஜய் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது மின் தடை ஏற்பட்டது என்பது திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. மேலும், கூட்டம் ஏற்பாடு செயப்பட்டவர்களால் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர் மற்றும் ஃபோக்கஸ் லைட்டுகள் கூட்ட நெரிசலில் ஆஃப் ஆனது எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக த.வெ.க-வின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 27.09.2025 அன்று கரூர் - ஈரோடு வேலுச்சாமிபுரத்தில் காலை 12 மணிக்கு மேல் உரையாற்ற உள்ளார் என்றும் வேலுச்சாமிபுரம் நெரிசலான பகுதி என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தலைவர் பேசும்போது குறிப்பிட்ட நேரம் மட்டும் மின்சாரத்தை நிறுத்தம் செய்து தரும்படி கடிதம் 26.0.2025 அன்று பெறப்பட்டது. அவருடைய கோரிக்கையானது அன்றே மறுக்கப்பட்டு விட்டது.
டிரான்ஸ்ஃபாரமில் அந்த இடத்தில் ஆஃப் செய்வதற்கு மறுத்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த இடத்தில் மின்வாரியத்தில், தொண்டர்கள் மரத்தில் ஏறுகிறார்கள். டிரான்ஸ்பாரத்தில் ஏறும் ஆபத்து இருக்கிறது. அதையும் மீறி அந்த இடத்தில் ஏன் அனுமதி கொடுத்தீர்கள்? இல்லையென்றால் வேறு இடத்தில் அனுமதி கொடுத்திருக்கலாம். இல்லையென்றால் அனுமதியே கொடுக்காமல் இருந்திருக்கலாம், இதற்கு அரசு நிர்வாகமும் ஒரு பொறுப்புதானே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம், “எல்லா இடங்களிலும் பொதுவாக அனுமதிக்கப்படும் இடம் இலாக்கா கலெக்டர், அரசியல் கட்சிகளை வைத்து ஒரு கூட்டம் நடத்தி செயல்முறை நடத்திதான் அனுமதி கொடுக்கிறார்கள். இது காவல்துறை மட்டும் எடுக்கக்கூடிய முடிவு கிடையாது. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் அரசியல் கட்சிகளை வரவழைத்து அவர்களிடம் பேசி, அவர்க மாவட்டத்தில் எங்கெல்லாம் அரசியல் கூட்டம் நடத்தலாம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் அந்த இடமும் ஒன்று. 2022-ல் இருந்து அந்த இடதைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.” என்று கூறினார்.
அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும்போது, ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் எதிர்க்கட்சிகளுக்கு ஒருமாதிரியான அனுமதியும் கொடுக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசிர்வாதம், “பொதுவாக எல்லா கட்சிகளுக்கும் நாங்கள் அனுமதி கொடுக்கிறோம். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறதோ, பாத யாத்திரையோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக நாங்கள் அனுமதி கொடுக்கிறோம். நிபந்தனைகள் போடும்போது ஒரு சிலருக்கு வேறுமாதிரி இருக்கிறது.
அவர்கள் மின்சாரத்தை நிறுத்த அனுமதி கேட்டதாக கூறுகிறீகள். ஆனால், நிறைய பேர் மரத்தில் ஏறிய பிறகு மின்சாரம் நிறுத்தியதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மின்சார வாரிய கரூர் மண்டல லைமைப் பொறியாளர் சே. ராஜலட்சுமி, “பாதுகாப்புக்காக மின்சாரத்தை நிறுத்தினோம். நிறுத்திவிட்டு பிறகு, திரும்ப மின்சாரத்தைக் கொடுத்துவிட்டோம். இது அவர் (விஜய்) வருவதற்கு முன்னால் நடந்தது. அவர் வரும்போது நடக்கவில்லை.
அவர் வருவதற்கு முன்னால், மரத்தின் மேல் ஏறினார்கள், டிரான்ஸ்ஃபார்மர் மேல் ஏறினார்கள். மரத்தின் மேல் ஏறினால், எடை தாங்காமல் மின்சார கம்பிகள் மேல் விழுந்துவிடுவார்கள். அது ரொம்ப தீவிரமான சூழ்நிலையாகப் போய்விடும். காவல்துறையுடன் அவர்களை இறக்கிவிட்டுவிட்டு திரும்பவும் மின்சாரம் கொடுத்துவிட்டோம். ” என்று கூறினார்.
ஆனால், அவர்கள் கூட்டம் முடியும் வரை தொடர்ந்து மரத்தின் மேலேதான் இருந்தார்கள். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. நீங்கள் சொல்லும் கருத்து முரணாக இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜலட்சுமி அவர்கள் மின் கம்பி தடத்தை விட்டு நகர்ந்து வந்துவிட்டால் மின்சாரம் கொடுத்துவிடுவோம் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், “இந்த விஷயங்களை எல்லாம் விசாரணை ஆணையத்திலும் கேட்பார்கள். அப்போது பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/vijay-rally-stampede-karur-tneb-chief-engineer-clarifies-on-power-cut-during-tvk-rally-and-adgp-davidson-devasirvatham-answer-10510909