/indian-express-tamil/media/media_files/2025/09/25/agni-prime-missile-test-2025-09-25-10-48-01.jpg)
India test-fires Agni-Prime missile from rail-based mobile platform
இந்தியா தனது பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அக்னி-பிரைம் ஏவுகணையைச் சோதித்தது. இந்த ஏவுகணை, வழக்கமான ஏவுதளத்தில் இருந்து அல்லாமல், ரயில்வேயில் இருந்து ஏவப்பட்டது. இது இந்தியப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தச் சோதனையை உறுதிசெய்துள்ளார். X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அக்னி-பிரைம் ஏவுகணையானது 2,000 கிலோமீட்டர் தொலைவு வரை பாயக்கூடியது. அதுமட்டுமின்றி, இதில் பல்வேறு நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது எதிரிகளைத் திணறடிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையானது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுதளத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இது எதிரிகள் கண்டறியாத வகையில், நாட்டிற்குள் எந்த இடத்திலிருந்தும் மிகக் குறுகிய நேரத்தில் ஏவக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.”
இந்த மாபெரும் வெற்றிக்கு அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO மற்றும் இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அதிநவீன தொழில்நுட்பம்!
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஏவுகணையில் அதிநவீன தொடர்பு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இது எந்த உதவியும் இல்லாமல், தானாகவே ஏவப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் பாதை, பல கண்காணிப்பு நிலையங்களால் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது. இது ராணுவத்திற்குப் புதிய பலத்தைச் சேர்க்கும் எனவும், எதிர்காலத்தில் ரயில் அடிப்படையிலான ஏவுகணை அமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின்போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) மூத்த விஞ்ஞானிகளும், ராணுவ உயரதிகாரிகளும் உடன் இருந்து இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இதற்கு முன்பு, சாலை வழியாக (road mobile) ஏவப்படும் அக்னி-பிரைம் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டு, ஏற்கனவே இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/agni-prime-missile-test-india-missile-launch-rail-based-mobile-launcher-rajnath-singh-indian-defense-10499634