/indian-express-tamil/media/media_files/2025/11/26/sir-camp-2-2025-11-26-12-45-46.jpg)
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் நவம்பர் 4 அன்று தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக, வாக்காளர் சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers - BLOs) ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கினர். இந்தப் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, அவற்றை அலுவலர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
இந்தியத் தேர்தல் ஆணையம் களப்பணிகள் முடிவடையும் தேதியை இருமுறை நீட்டித்தது. அதன்படி, இந்தப் பணிகள் இன்று (டிச.4 ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகின்றன. வாக்காளர்களுக்குப் படிவங்களை 100% விநியோகித்தல், அவற்றைப் பெற்று பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகளை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே முடித்துவிட்டனர்.
இந்த பதிவேற்றப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வரைவுப் பட்டியல் வருகிற 19-ஆம் தேதி வெளியிடப்படும். வரைவுப் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் அல்லது திருத்தங்கள் செய்தல் ஆகியவற்றுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/voter-list-sir-last-day-of-form-submission-10908464





