வெள்ளி, 22 ஜூலை, 2016

தாம்பரத்தில் இருந்து சென்ற விமானப்படை விமானம் நடுவானில் மாயம் : 29 பேரின் கதி என்ன?


சென்னை தாம்பரத்தில் இருந்து சென்ற விமானப்படை விமானம் மாயமாகியுள்ளது. 29 பேருடன் அந்தமான் புறப்பட்ட விமானம் நடுவானில் மாயமாகியுள்ளது. காலை 7.30-க்கு புறப்பட்ட விமானம் கடைசியாக 8.12 மணிக்கு ராடர் கருவியில் தெரிந்தது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வங்ககடலுக்கு மேலே சென்ற போது விமானம் மாயமாகியுள்ளது. காணாமல் போன விமானப்படை விமானம் ஏ.என்.32 வகையை சேர்ந்தது ஆகும்.
இந்த விமானம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. விமானத்தை தேடும் பணி சென்னையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் நடைபெற்று வருகிறது. இதே போல் அருணாச்சலபிரதேசத்தில் 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் ஏ.என்.32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அப்போது நடந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தை தேடும் பணி
மாயமான விமானத்தை தேடும் பணியில் 4 கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கர்முக், கரியால், ஜோதி, குதார் ஆகிய கடற்படை கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் 2 டார்னியர் விமானங்களும் விமானத்தை தேடி வருகின்றது.
முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து
வங்க கடலில் ராணுவ விமானம் மாயமானது இதுவே முதல் முறை என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுந்நதரம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் அந்தமான் செல்ல 2 மணி 10 நிமிடம் ஆகும். முழு சோதனைக்கு பிறகே விமானம் புறப்படும் எனவும் ராணுவ அதிகாரி சுந்தரம் தெரிவித்துள்ளார். இயந்திர கோளாறால் விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பருவநிலை பாதகமா?
சென்னை - அந்தமான் இடையிலான வான் வெளியில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. தாழ்வு மண்டலத்தை கடந்து சென்ற போது ராணுவ விமானம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என தெரிகிறது. சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 16-வது நிமிடத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் விமானம் சிக்கியிருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.